logo
புதுக்கோட்டை காந்தி பூங்காவிலுள்ள மணிக்கூண்டின் கடிகாரத்துக்கு நல்ல நேரம்  வருமா?

புதுக்கோட்டை காந்தி பூங்காவிலுள்ள மணிக்கூண்டின் கடிகாரத்துக்கு நல்ல நேரம் வருமா?

13/Oct/2020 06:43:24

புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள காந்தி பூஙகாவின் மணிக்கூண்டில் பொருத்தப்ப்ட்டுள்ள  பழங்கால கடிகாரம் மீண்டும் நேரத்தை காட்ட நல்ல நேரம் வருமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 புதுக்கோட்டை நகர வாசிகளில் முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோருக்கு  பொழுது போக்குவதற்கும், சுத்தமான காற்றை சுவாசித்து  காலார நடப்பதற்கும் ஏதுவாக நகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள 20 -க்கும் மேல்பட்ட பூங்காங்களை சீரமைக்க வேண்டுமென்ற பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், முதல் கட்டமாக புதுகை நகரின் கிழக்குப்பகுதியில் உள்ள புதுக்குளத்தின கரைப்பகுதிகள், மையத்திலுள்ள காந்தி பூங்கா, புறவழிச்சாலை அருகிலுள்ள பெரியார்நகர் ஆகிய பகுதிகளில் உள்ள பூங்காக்களை சீரமைப்பதற்காக ரூ.1.25 கோடி நிதியை அரசு ஒதுக்கியது. 

அதில், புதுக்குளத்தில் ரூ. 50 லட்சத்திலும், காந்தி பூங்காவில் ரூ. 37 லட்சத்திலும், பெரியார் நகரில் ரூ.38 லட்சத்திலும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அமைப்புகளுடன் மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னதாக புதுப்பிக்கப்பட்டன. 

 புதுக்குளத்டதில் நீருற்று, செயற்கை அருவி, நடைபாதை, குழந்தைகள் விளையாடுமிடம், செடி கொடிகள், புல் தளம், பாதசாரிகள் ஓய்வு எடுக்கும் நிழல்குடை ஆகியவை அமைக்கப்பட்டன.

இதே போல,  புதுக்கோட்டை நகரின் புராதான கட்டிடங்களை பராமரித்து பாதுகாக்கும் நோக்கில் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் அரசவைக்கூடமாக இருந்த நகர்மன்ற கட்டிடத்தை அதனுடைய புராதன முக்கியத்துவம் மாறாமல் பராமரிக்க தேவையான மராமத்து பணிகள் ரூ.25 லட்சத்தில்  செய்து முடிக்கப்பட்டன. புதுக்கோட்டை நகரை அதனுடைய பழமை  மற்றும் அழகிய நகர்புற வடிவமைப்பு மாறாமால் பராமரிக்கும் நோக்கில்  ரூ.1 கோடியில் 196  புராதன அலங்கார   மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.

 புதுக்கோட்டை  நகரின் மத்தியில் கீழராஜவீதியின் தொடக்கத்தில் அமைந்துள்ள  காந்தி பூங்காவில் ரூ. 37 லட்சம் செலவில், புல்தளம், செடிகள், நடை பாதைகள், சுவர்களில் வண்ண ஓவியங்கள், மழை நீரை சேகரிக்கும வகையில் குளமும் அதற்கு நீர் செல்லக்கூடிய வகையில் கால்வாய்களும்  தூர்வாரப்பட்டு லேசான மழை பெய்தால்கூட இங்கு மழைநீர் சேமிக்கும் நிலை உருவாக்கப்பட்டது. மேலும், கடந்த 22.12.1933 -இல்  புதுக்கோட்டையின் முனிசிபல் சேர்மனாக இருந்த ஹோல்ஸ்வோர்த் என்பவர்  இந்த மணிக்கூண்டை திறந்து வைத்திருக்கிறார்.

 நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த இந்த கடிகாரம் அவ்வப்போது பழுதாவதும், சீரமைப்பதுமாக தனது கடமையைச் செய்து வந்தது. இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இயங்காமல் இருந்த மணிக்கூண்டு கடிகாரம் சுமார் ரூ. 3 லட்சம் செலவில் சீரமைத்து  இயக்கிவைக்கப்பட்டது.

இச்சூழலில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த மணிக்கூண்டின் கடிகாரத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக தனது பணியை நிறுத்திக் கொண்டது. ஏறத்தாழ 87 வருடங்களாக புதுக்கோட்டை நகர மக்களுக்கு நேரத்தை அறிந்து கொள்ள உதவி வந்த, புதுக்கோட்டை நகரின் முக்கிய அடையாளமாகத்திகழும் இந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க இந்த கடிகாரத்தை மீண்டும் இயங்கச்செய்வதற்கு நகராட்சி நிர்வாகம் நேரம் தாழ்த்தாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.


Top