logo
முகக்கவசம், கிருமிநாசினிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க தமிழக அரசுக்கு  நீதிமன்றம் உத்தரவு

முகக்கவசம், கிருமிநாசினிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

18/Mar/2020 06:28:44

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க கோரிய மனு குறித்து தமிழக அரசுக்கு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

   உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் முகக் கவசங்கள், கிருமிநாசினி திரவங்களை அத்தியாவசிய பொருள்களாக அறிவிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தப் பொருள்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அவற்றை பதுக்கி வைப்பது, அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு  அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு பிற மாநிலங்கள் பதில் அளித்த போதும் தமிழக அரசு மட்டும் எந்தவித பதிலும், நடவடிக்கையும், எடுக்கவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை சென்னை வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கூறியுள்ளார். மேலும் மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று தமிழக அரசு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு குறித்து விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் மார்ச் 20-ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை  நாளைக்கு  ஒத்திவைத்துள்ளனர்

Top