logo
தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை  நிர்ணயிக்க ஏஐடியுசி சங்கம் கோரிக்கை

தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க ஏஐடியுசி சங்கம் கோரிக்கை

08/Oct/2020 12:18:51

இது குறித்து, ஈரோடு மாவட்ட ஆட்சியருக்குத், ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாவட்டத்தலைவர் எஸ். சின்னசாமி அனுப்பியுள்ள முறையீடு மனு விவரம்:

ஈரோடு மாவட்டத்தில்  மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்கள், டெங்கு, மலேரியா நோய்த்தடுப்பு பணியாளர்கள், ஓட்டுநர்கள், காவலாளிகள் உள்ளிட்ட உள்ளாட்சித் தொழிலாளர்கள் மற்றும் கணினி ஆப்ரேட்டர்கள், தோட்டக்காரர்கள், மேசன்கள், மஸ்தூர்கள், தச்சர்கள், குழாய் பொருத்துபவர், வர்ணம் பூசுபவர், கம்பியாள் போன்ற பலவகையான தினக்கூலி தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர்  நிர்ணயித்து அறிவிக்கும் விகித அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். தினக்கூலி பணியாளர்களுக்கு மாவட்ட அளவிலான குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதிலும், அதனை அமலாக்குவதிலும் தமிழகத்திற்கே முன்மாதிரியாக ஈரோடு மாவட்டம் விளங்கி வருவதை நன்றியோடு நினைவு கூர்கிறோம்.

ஆனால், மேற்படி தினக்கூலி தொழிலாளர்களுக்கு, 1-4-2020 முதல் அமலாக்கப்படவேண்டிய, 2020-2021 -ஆம் ஆண்டுக்கான மாவட்ட குறைந்த பட்ச ஊதியம் நாளது வரை நிர்ணயித்து அறிவிக்கப்படாமல் உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஊதிய இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு 20-09-2019 அன்று மாவட்ட குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயித்து அறிவிக்கப்பட்டதையும், திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒருமாதத்திற்கு முன்பே மாவட்ட குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்து அறிவிக்கப்பட்டுள்ளதையும் தங்களது மேலான கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம். 

மேலும், இந்த ஆண்டுக்கான குறைந்த பட்ச ஊதிய நிர்ணயம் தொடர்பாக எமது ஏஐடியுசி  சங்கத்தின் கோரிக்கைகளை பார்வையில் கண்ட கடிதங்கள் மூலம் தெரிவித்துள்ளோம். குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கும்போது அவற்றையும் பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

ஆகவே, தாங்கள் உடனடியாகத் தலையிட்டு, உரிய நடவடிக்கைகளை  மேற்கொண்டு நடப்பாண்டுக்கான (2020-2021) மாவட்ட குறைந்த பட்ச ஊதியத்தை விரைவில் நிர்ணயித்து அறிவிக்குமாறும், அதனை முன்தேதியிட்டு அமலாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும்  அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


Top