logo
உலக சாதனையை படைத்தது புதுக்கோட்டை ஸ்ரீபுவனேஸ்வரி தங்கமாளிகை தயாரித்த  தங்க ஒட்டியாணம்..!

உலக சாதனையை படைத்தது புதுக்கோட்டை ஸ்ரீபுவனேஸ்வரி தங்கமாளிகை தயாரித்த தங்க ஒட்டியாணம்..!

07/Oct/2020 09:21:09

புதுக்கோட்டை:  புதுக்கோட்டையிலுள்ள ஸ்ரீபுவனேஸ்வரி தங்கமாளிகை  நிறுவனம்  2 கிலோ 851 கிராம் 260 மில்லி கிராம் எடையில் தயாரித்த  தங்க ஒட்டியாணம் மிகப்பெரிய ஒட்டியாணம் என்ற உலக சாதனையை படைத்தது.


புதுக்கோட்டையில் ஸ்ரீபுவனேஸ்வரி தங்க மாளிகை என்னும் நகை வணிக நிறுவனம் 40 ஆண்டு காலமாக பொதுமக்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பைப் பெற்று இயங்கி வருகிறது.  இந்நிலையில், தங்க மாளிகையின் 40-ஆவது ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், உலகிலேயே மிகப்பெரிய ஒட்டியானம் வடிவமைக்க இந்நிறுவனத்தினர்  திட்டமிட்டனர்.  இதைத்தொடர்ந்து, சொக்கத்தங்கத்தில் (PURE GOLD) மிகச் சரியாக 2851.260 கிராம் (2 கிலோ 851 கிராம் 260 மில்லி கிராம்) எடையில்  BIS  ஹால்மார்க் உலகத்தரத்துடன்,  12 நகை செய்யும் கலைஞர்கள் 8 மாதங்களாக மிகுந்த கவனத்துடன் கடுமையாக உழைத்து இந்த மிகப்பெரிய ஒட்டியாணத்தை  வடிவமைத்து செய்து முடித்தனர்.

மிகப்பெரிய அளவில்  வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஒட்டியாணத்தினை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ஸ்(United States LLC) உலக சாதனை நிறுவனம் இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாதெமி உலக சாதனை நிறுவனம் மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக நிறுவனம் என 3  நிறுவனங்களும் நேரில் ஆய்வு செய்திட அழைப்பு விடுக்கப்பட்டது..

இதையடுத்து, புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி தங்கமாளிகையின் நிர்வாகிகள் சோம. நடராஜன், சோம.யோகராஜன், என். விஜய்ஸ்ரீநாத் ஆகியோர் முன்னிலையில் இன்று(6.10.2020)   புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் விழா நடைபெற்றது.

 விழாவில்  கலந்து கொண்ட  எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ஜவகர் கார்த்திகேயன்,  இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாதெமி அசோஸியேட் எடிட்டர் ஜெகன்நாதன் மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தென்னிந்திய ஆய்வாளர் ராஜ் கிருஷ்ணா ஆகியோர் மிகப்பெரிய அளவில்  வடிவமைக்கப்பட்டிருந்த இந்த  தங்க ஒட்டியாணத்தை ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து, உலகிலேயே மிகப்பெரிய தங்க ஒட்டியாணம் என்னும் சாதனையை இந்த .ஒட்டியாணமும் இந்த மிகப் பெரிய தங்க ஒட்டியாணத்தை தயாரித்த  நிறுவனம் எனும் சாதனையை ஸ்ரீபுவனேஸ்வரி தங்க மாளிகை நிறுவனமும் பெற்றுள்ளதாக அறிவித்தனர்.  இதையடுத்து, இந்த மூன்று நிறுவனங்களின் சார்பில் உலக சாதனை புரிந்ததற்கான சான்றிதழ்களை தனித்தனியே  வழங்கி நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

 இதுகுறித்து, ஸ்ரீ புவனேஸ்வரி தங்கமாளிகையின் நிர்வாகி சோம. நடராஜன் கூறியதாவது:   புதுக்கோட்டையில் நகை வணிகம் தொடங்கப்பட்டு 40- ஆவது ஆண்டில்  நிகழ்த்தப்பட்ட இந்த உலக சாதனையை தனது தந்தை என். சோமசுந்தரம் ஆச்சாரியாரின் 14-ஆவது நினைவு (6.10.2020)  நாளில் அவருக்கு சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தார்.


Top