logo
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோட்டில் 2-வது வாரமாக 24 இடங்களில் கடைகள் அடைப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோட்டில் 2-வது வாரமாக 24 இடங்களில் கடைகள் அடைப்பு

22/Aug/2021 11:59:50

ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஈரோடு  மாவட்டத்தில் கடந்த 9-ந் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவித்தார். அதன்படி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள கீழ்க்காணும் பகுதிகளில் இயங்கும் பால், மருந்தகம், மளிகை கடை, காய்கறி கடைகள், உணவகங்கள் ஆகியவை தவிர பிற கடைகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்  இயங்க முழுமையாக தடை விதிக்கப்பட்டது. . இதன்படி கடந்த வாரம் மாவட்டம் முழுவதும் 24 இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து இரண்டாவது வாரமாக  இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) அதே போல   24  இடங்களில் அத்தியாவசியப் பொருட்கள் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

ஈரோடு மாநகர் பொருத்தவரை ஈஸ்வரன் கோயில் வீதி, மணிக்கூண்டு, ஆர்.கே.வி. ரோடு பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் உள்ளன. இதனால் இந்தப் பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். ஏராளமான வீட்டு உபயோக பொருட்கள் கடைகள், அழகு சாதன கடைகள் போன்ற கடைகள் இருப்பதால் இங்கு மக்கள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். 

இந்த பகுதியில் அனைத்தும் இன்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.  இதைப்போல் ஸ்டோனி பாலம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டும் மூடப்பட்டிருந்தது. இந்த பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களின் கடைகள் மட்டுமே இன்று திறக்கப்பட்டு இருந்தது. மாநகராட்சி சார்பில் அலுவலர்கள் முக்கிய வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதா என்பதை கண்காணித்தனர்.

ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் 11 இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதுபோல் கோபி, சத்தியமங்கலம்,பவானி, புளியம்பட்டி, தாளவாடி என மொத்தம் 24 இடங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் இந்த பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் இந்த 24 இடங்களில் 12 டாஸ்மாக் கடைகள் வருவதால் அந்த 12 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருந்தது. இரவு முதல் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருவதால் மா நகர் பகுதி முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Top