logo
புதுக்கோட்டையின் பழமையான ஆவணங்களை பாதுகாத்திட கோரிக்கை

புதுக்கோட்டையின் பழமையான ஆவணங்களை பாதுகாத்திட கோரிக்கை

21/Aug/2021 08:52:07

புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டையின் பழமையான ஆவணங்களை பாதுகாத்திட வேண்டுமென புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.  

இது தொடர்பாக, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தலைவர் கரு.ராசேந்திரன், நிறுவனர் ஆ.மணிகண்டன் ஆகியோர் வெளியிட்ட  அறிக்கை:

 புதுக்கோட்டை சமஸ்தானம் ஆங்கிலேயர்கள் ஆண்டபோதும் தனிப்பெருமை குன்றாது தனி அரசாக இருந்தது இந்தியா சுதந்திரம் பெற்று ஆறு மாதம் கழித்தே இந்தியாவுடன் இணைந்த வரலாற்றுப் பெருமையும் கொண்டது புதுக்கோட்டை. 

பழமை வாய்ந்த கல்வெட்டு குறிப்புகளின் கல்வெட்டு மைப்படி நகல்கள், சுமார் 300 ஆண்டுகள் வரையிலான பழமையான கோப்புகள், சட்டப்பேரவை குறிப்புக்கள் , ஆங்கில அரசிற்கும் தொண்டைமான்கள் நிர்வாகத்திற்குமான ஒப்பந்தங்கள், கடிதத் தொடர்புகள், நிர்வாகச் செயற்பாடுகள், மிகவும் அரிதான புத்தகங்கள், ஏனைய தென்னிந்தியாவின் முக்கிய சமஸ்தானங்களை பற்றி குறிப்புகள்.

புதுக்கோட்டைக்கு வந்த நேருவின் கார் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட உத்தரவு, மகாத்மா காந்தி புதுக்கோட்டைக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட உத்தரவு, தடை விதிக்கப்பட்ட சில நல்ல ஆண்டுகளுக்குப் பிறகு பொதுமக்கள் இதற்காக வருத்தம் தெரிவித்த ஆவணக் குறிப்புகள், கட்டபொம்மன் சமஸ்தான பகுதிக்குள் இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட அலுவலக நடைமுறைகள் குறித்த குறிப்புகள் உள்ளிட்ட மிக முக்கியமான தகவலடங்கிய கோப்புகள் புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தன.

 முதலாவதாக மாணவர்களுக்கு பள்ளிகளில் உணவு வழங்கியது, அனைவருக்கும் கல்வி வழங்கிட எடுத்த முடிவுகள், பஞ்சம் போக்கிட அரசு மக்களுக்கு வழங்கிய வேலைவாய்ப்புகள் அதன் மூலம் ஏற்படுத்தப்பட்ட நீர்நிலைகள், இந்திய அரசிற்கே வழிகாட்டிய நிர்வாக நடைமுறைக்குறிப்புகள், தனித்துவ பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் இதில் அடக்கம்.பருத்தியால் உருவாக்கப்பட்ட பழமையான காகிதங்கள் என்பதால் கரையான் உள்ளிட்ட உயிரிய பாதிப்புகள் குறைவாகவே உள்ளன.

கடந்த ஆட்சியின் போதே இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி மனு அளித்தும் எந்தப்பதிலும் எமக்கு கிடைக்கவில்லை.நீதிமன்ற உத்தரவால்  புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தொண்டைமான்களின் நிர்வாக செழுமையை விளக்கும் காகித ஆவணங்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளன எனத்தெரியவில்லை. 

செழுமையான நிர்வாகத்தை வெளிப்படுத்தும் இத்தகைய ஆவணங்களை காத்திட சென்னை ஆவணக்காப்பகத்தின் கிளையை புதுக்கோட்டையில் ஏற்படுத்தி லட்சக்கணக்கான , தொல் ஆவணங்களை பாதுகாத்திட தமிழ்நாட்டு அரசின் வாயிலாக உரிய வழிகாட்டுதலை செய்திட தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்.தென்னரசு அவர்களிடம் கேட்டுக்கொண்டோம்.

எங்களது கோரிக்கை குறித்து  தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், முதல்கட்டமாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் பேசி துறை ரீதியிலான ஆவணங்களை பாதுக்கப்பதற்கான வழிகாட்டுதல் செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்கள். இது சார்ந்து துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ள  அமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். 

மேலும், புதுக்கோட்டையிலுள்ள இந்திய வரலாற்றின் மிக முக்கிய ஆவணங்களை பாதுகாத்திட சென்னை ஆவணக்காப்பகத்தின் கிளையைபுதுக்கோட்டையில் அமைத்து இந்த ஆவணங்களை பாதுகாத்திட தொடர்பணியை மேற்கொண்டு உதவுவார்கள் என நம்பிக்கையோடு வேண்டுகிறோம்.

 


Top