logo
புதுக்கோட்டையில்  654 பயனாளிகளுக்கு ரூ.3.97 கோடியில் திருமண நிதியுதவி,  தாலிக்கு தங்கம்:  அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வழங்கல்

புதுக்கோட்டையில் 654 பயனாளிகளுக்கு ரூ.3.97 கோடியில் திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம்: அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வழங்கல்

04/Jul/2021 08:31:39

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஆட்சியர் கவிதாராமு தலைமையில்   (04.07.2021 ) நடைபெற்ற நிகழ்வில்   சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்எஸ்.ரகுபதி மற்றும்  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  ஆகியோர் பங்கேற்று 654 பயனாளிகளுக்கு ரூ.3.97 கோடியில்  தாலிக்கு தங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர் அமைச்சர் எஸ்.ரகுபதி  பேசியதாவது: நவீன தமிழகத்தின் சிற்பி  முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் 1989 -ஆம் ஆண்டு மகளிர் திருமண உதவித்தொகை திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் மகளிர் கல்வி கற்க வேண்டும் மற்றும் ஏழை குடும்பங்களுக்கு நிதியுதவி செய்ய வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது.

சமூக நலத்துறையின் மூலம் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் சமூக மேம்பாட்டிற்காக தொண்டாற்றிய பெண்களின் பெயர்களிலேயே வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக முதல்வரின் அறிவுறுத்தலுக்கிணங்க அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் எவ்வித விளம்பரமும் இல்லாமல் எளிமையாக நடத்தப்பட்டு வருகிறது.


தமிழகத்தில் உள்ள மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நகர அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதித்தது மகளிரிடையே முதல்வருக்கு  ஆதரவு அதிகரித்துள்ளதுமேலும் ரூ.4,000 கோவிட் நிவாரண உதவித்தொகை மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் தொகுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு புதிய வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர் ரகுபதி.

அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை பெற்றோரின் சுமை நீங்கியுள்ளது.மகளிர் முன்னேற்றத்தில் முதலமைச்சர்  மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். இதன்படி கோவிட் தொற்றால் தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சமும், பெற்றோரில் ஒருவரை இழந்தால் ரூ.3 லட்சமும் வழங்கஉத்தரவிட்டுள்ளார். மகளிரின் நிலை உணர்ந்து என்னென்ன தேவை என்பதை அறிந்து திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்.

முதல்வராக பொறுப்பேற்ற 60 நாட்களுக்குள் பல்வேறு சிறப்பான திட்டங்களை  செயல்படுத்தியுள்ளார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தை தமிழகத்திலேயே முன்மாதிரி மாவட்டமாக மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்அமைச்சர் மெய்யநாதன்.

முன்னதாக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் வரப்பெற்ற கோரிக்கை மனுவின் மீது தீர்வு காணும் வகையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய  சைக்கிள் நிறுத்தும் இடத்தின் அருகில்  நிரந்தரமாக ஆட்டோ ஸ்டாண்ட் வைப்பதற்கான அனுமதியை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

இதில்புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 654 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவித் தொகையாக ரூ.3.97 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் 25 மகளிருக்கு விலையில்லா தையல் இயந்திரங்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 22 பேருக்கு  அடையாள அட்டை மற்றும் கோவிட் இரண்டாம் கட்ட நிவாரணத்தொகை தலா ரூ.2,000 என ரூ.44,000 நிதியுதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை , மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட சமூக நல அலுவலர் ரேணுகா, வருவாய் கோட்டாட்சியர் அபிநயாநிர்வாகிகள் .நைனா முகமது, எம்.எம்.பாலு, சுப.சரவணன், ராமகிருஷ்ணன், பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Top