logo

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் புதிய பேருந்து வழித்தடங்கள்: அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், எஸ்.ரகுபதி தொடக்கி வைப்பு

20/Aug/2021 11:01:36

புதுக்கோட்டை, ஆக:  புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் புதிய பேருந்து வழித்தடங்கள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில்  (20.08.2021) நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில், புதிய பேருந்து வழித்தடங்களை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி,  போக்குவரத்துத்துறை அமைச்சர் .ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்  ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

பின்னர்  சட்ட அமைச்சர் ரகுபதி பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று  பொன்னமராவதியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஏற்கெனவே நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகள் இயக்கம் மீண்டும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் சார்பில் இப்பகுதி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற நூறு நாட்களிலேயே இந்தியா டுடே மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற பத்திரிக்கைகளின் கணிப்புகளில் இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களில் சிறந்த முதல்வராக தேர்வு பெற்று தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றும் வகையில் செயல்பட்டு வருகிறார். தமிழகம் சிறந்த முதலமைச்சரை பெற்றுள்ளது. 

மக்கள் நலனில் அக்கரையுள்ள அரசு, மக்களுக்கான அரசாக தமிழக அரசு திகழ்கிறது.

 மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இப்பேருந்துகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்துகளை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நகரப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்யலாம். 

அரசு பேருந்து இயக்கமானது மீண்டும் துவக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 8 வழித்தடங்களில் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொதுமக்களின் கோரிக்கைக்கேற்ப பொன்னமராவதி பேருந்து நிலையத்திலிருந்து பழனி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  பொதுமக்களின் வசதிக்காக தற்பொழுது அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு பேருந்துகளில் இலாபத்தை கருத்தில் கொள்ளாமல் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றார்

போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்  பேசியதாவது; தமிழக முதல்வர் போக்குவரத்துத்துறையின் சார்பில் ஏற்கெனவே நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மீண்டும் இயக்க உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையில் அதிக எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்கவும் அறிவுறுத்தியுள்ளார்கள். 

முதலமைச்சர்   உத்தரவின்படி, தமிழகத்தில் அரசு நகரப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், தற்பொழுது தமிழகம் முழுவதும் அரசு நகரப் பேருந்துகளில் 60 சதவீதம் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர். 

மேலும் இன்றையதினம் பொன்னமராவதி பேருந்து நிலையத்திலிருந்து 14 வழித்தடங்களில் 12 பேருந்துகள் இயக்கம் துவக்கி வைக்கப்பட்டு;ள்ளது. இதில் 5 பேருந்துகள் வழித்தட மாற்றமும், 7 பேருந்துகள் நிறுத்திய பேருந்து இயக்கமும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் 8 பேருந்துகள் நகரப் பேருந்துகளாகும். இப்பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்யலாம். மேலும் பொதுமக்களின் கோரிக்கைக்கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

தமிழக அரசு மக்களின் அரசு என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்கள். இந்தியாவில் அனைவரும் பாராட்டக்கூடிய ஆளுமைமிக்க முதல்வராக தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்கிறார்.  பொதுமக்களுக்கு சேவை செய்யும் துறையாக தமிழக அரசின் போக்குவரத்துக் கழகம் திகழ்கிறது என்றார் 

இந்நிகழ்ச்சியில்,புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர்கே.கே.செல்லப்பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராசு.கவிதைப்பித்தன், அரசு போக்குவரத்துக் கழக (கும்பகோணம்) மேலாண் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மோகன்.

அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் ஆர்.இளங்கோவன், வருவாய் கோட்டாட்சியர் எம்.எஸ்.தண்டாயுதபாணி, ஒன்றியக் குழுத் தலைவர்கள் சுதாஅடைக்கலமணி (பொன்னமராவதி), திருமதி.மேகலாமுத்து (அரிமளம்), ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அடைக்கலமணி, அழகு(எ)சிதம்பரம் மற்றும் அழகப்பன், த.சந்திரசேகரன், கே.ராமகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 


Top