logo
இந்தியாவிலேயே முதலாவதாக ஆண்டுக்கு 25,000 வீடுகள் கட்டும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்: கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர்.பொன்குமார்தகவல்.

இந்தியாவிலேயே முதலாவதாக ஆண்டுக்கு 25,000 வீடுகள் கட்டும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்: கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர்.பொன்குமார்தகவல்.

20/Aug/2021 10:13:27

புதுக்கோட்டை, ஆக: இந்தியாவிலேயே முதலாவதாக கட்டுமானத்தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 25,000 வீடுகள் கட்டிக்கொடுக்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் அறிவித்துள்தாக  கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்குமார் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக்  கூட்டரங்கில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழிலாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி  மாவட்ட வருவாய் அலுவலர்  பெ.வே.சரவணன்  தலைமையில்(19.8.2021) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்குமார்   நல வாரிய தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் விபத்தில் மரணமடைந்த ஒரு தொழிலாளியின் வாரிசுதாரருக்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பிலான நிதியுதவிக்கான ஆணையினை வழங்கினார். மேலும், 25 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,000 பெறுவதற்கான ஆணையினை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர்  வழங்கி பேசியதாவது;

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்களுடன் முதல் கலந்தாய்வுக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறுகிறது. 1982-இல் உடல் உழைப்பு தொழிலாளர்கள் சட்டமும், 1994-இல் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான வாரியமும் அமைக்கப்பட்டது. 

முன்னாள் முதலமைச்சர்  கலைஞரால்  2006 -ஆம் ஆண்டில் ஆட்டோ ஓட்டுநர்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள்,  நடைபாதை வியாபாரிகள், சலவை தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் 17 வகையான வாரியங்களை அமைத்து சிறப்பாக செயல்பட்டு வந்தது. 

 தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  தலைமையிலான தமிழகஅரசு மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக கடந்த 50 நாட்களில் தமிழகம் முழுவதும் தொழிலாளர் நல வாரியத்தில் நிலுவையில் இருந்த 50,000 விண்ணப்பங்கள்  சரிபார்த்து, இதில் முதற்கட்டமாக 200 நபர்களுக்கு உரிய நலத்திட்ட உதவிகளை சென்னையில்   முதலமைச்சர் வழங்கினார்.  இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் வாரியத்தில் ஆன்லைன் பதிவு முறையில் எளிமைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் எளிய முறையில் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர்  புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இதன்படி இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், ஆண்டுக்கு 25,000 தொழிலாளர்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்பட உள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 38,821 கட்டுமானத் தொழிலாளர்களும், 21,905 அமைப்பு சாரா தொழிலாளர்களும் என மொத்தம் 60,726 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். 

ஏற்கெனவே வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களை மீண்டும் வாரியத்தில் பதிவு செய்து, அவர்களது குடும்பத்தினருக்கு தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் நேரடியாக சென்று சேர்வதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்களில் விபத்துக்களால் இறப்பு நேரிடும்போது அரசின் சார்பில்   ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படுகிறது. 

தமிழகம் முழுவதும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்குமார் .

தொழிலாளர் இணை ஆணையர் த.தர்மசீலன் வரவேற்றார். தொழிலாளர் உதவி ஆணையர் வெ.தங்கராசு நன்றி கூறினார்.இதில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 


Top