logo
மாற்றத்துக்கான அரசியலை முன்னேடுத்து நிற்கும் இயக்கம் நாம் தமிழர் கட்சி மட்டும்தான்:  ஈரோடு மாவட்டத்தில் சீமான் பேச்சு

மாற்றத்துக்கான அரசியலை முன்னேடுத்து நிற்கும் இயக்கம் நாம் தமிழர் கட்சி மட்டும்தான்: ஈரோடு மாவட்டத்தில் சீமான் பேச்சு

25/Mar/2021 06:04:45

ஈரோடு,மார்ச்: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார்.

 ஈரோடு சோலார் பகுதிக்கு வியாழக்கிழமை  மதியம் 2.30 மணி அளவில்  வந்த அவர் மொடக்குறிச்சி, ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து விவசாயி சின்னத்துக்கு வாக்கு  சேகரித்து அவர் மேலும் பேசியதாவது: 

உலகெங்கும் அடிமைப்பட்டு இருக்கும் தமிழ் சமூகத்தின் இழந்த உரிமைகளை பெற்றுத்தர அரசியல் புரட்சியை முன்னெடுத்துச்செல்லும் பொறுப்பு நாம் தமிழர் கட்சிக்கு உள்ளது. உணர்வு இழந்த, உரிமை இழந்த மக்களாக தாய்த்தமிழ்நாட்டில் இருக்கும், அரசியல் வலிமை இல்லாத அதிகாரமற்ற, அடிமையாக, எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கும் தமிழ் சமூகத்துக்கான புரட்சி அரசியலை, மாற்றத்துக்கான அரசியலை முன்னேடுத்து நிற்கிறோம்.

எளிய மக்களின், உரிமை இழந்த மக்களின் மாற்றத்துக்கான ஒரு அரசியலாக இது உள்ளது.எல்லாகட்சிகளையும் நம்பி ஏமாந்து, எமக்கான அரசியல் தலைமை இல்லையே என்று, நம் கண் முன்னே இன்னொரு தாய் நிலத்தில் எமது சொந்தங்கள் அழிக்கப்பட்டபோது நமக்காக யாரும் இல்லையே என்று ஏமாந்து போன தன்மானம் மிக்க தமிழ் பிள்ளைகள் இங்கே இருக்கிறார்கள். 

இனி யாரையும் நம்பி பயன் இல்லை. நமது விடுதுலை, நமது உரிமையை வென்றேடுக்க நாமே போராடுகிறோம்.  ஒரு கட்சியில் இருந்து பிரிந்து வந்து தொடங்கிய கட்சியாக இல்லாமல், ஒரு கட்சியின் வாரிசு என்ற முறையில் வராமல், பொருளாதார வலிமையான கட்சியாக இல்லாமல், எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் எளிய மக்களின் நம்பிக்கையாக நாம் தமிழர் கட்சி உள்ளது.தேர்தல் என்பது வெற்றியை மட்டும்கொண்டது அல்ல. கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பதுதான் முதன்மையான வெற்றி.

 நாம் யாரோடும் கூட்டணி சேராமல் தனித்து நின்று தேர்தலை சந்திக்கிறோம். நமது நோக்கம் உயர்ந்தது. இந்த நோக்கத் துக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் தொடர்ந்து தேர்தலை சந்தித்து வருகிறோம். 2016-ம் ஆண்டு 1.1 சதவீதம் வாக்குகளை நீங்கள் கொடுத்தீர்கள். 2019-ம் ஆண்டு 17 லட்சம் வாக்குகளை தந்து எங்களுக்கு பெரிய நம்பிக்கையை விதைத்தீர்கள்.

அதே உற்சாகத்தோடு 2021 தேர்தலில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சரி சம இட ஒதுக்கீடு செய்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடு கிறோம். தனித்துவமாக களத்தில் நிற்கியோம். மண்டியிட்டு சரண் அடைவது தமிழர் பாரம்பரியம் கிடையாது. சரண் அடைந்தாலும் சண்டையிட்டு வீழ்வது வீரம்.

நாங்கள் ஒரு புள்ளியில் இருந்து தொடங்குகிறோம். மொழி மீட்சி என்பது நமது முதல் பொறுப்பாக இருக்கிறது. நமது தாய் மொழியை காணவில்லை. முதல் மொழியாக, முதல் மனிதன் பேசிய மொழியாக உலக மொழிகள் அனைத்துக்கும் தாய் என் தாய் தமிழ் மொழி. தமிழ் என்ற தாய் மொழி என்ற திமிரும் நமக்கு உண்டு. அப்படிப்பட்ட மொழியை மீட்க வேண்டும். தாயை பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே, தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடாதே. தமிழ் நம் பேச்சு மொழி மட்டும் அல்ல. மூச்சு மொழி.

மொழி மட்டுமின்றி இலக்கியம், வரலாறு, விவசாயம், காடு, நிலம், கடல் என்று அனைத்தையும் மீட்க வேண்டும். விதையை மீட்க வேண்டும். எல்லா விதையையும் அன்னியருக்கு விற்று விட்டோம். இப்போது அதை மரபு மாற்றம் செய்து நம் நிலத்துக்கே திரும்ப தருகிறார்கள். இப்போது ஒரு விதையில் இருந்து அனைத்தையும் மீட்கும் பொறுப்பு நம்மிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.

உங்கள் பிள்ளைகளாகிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். ஏதோ 4 அல்லது 10 சீட்டுகளை கூட்டணியில் வாங்கி, மேஜையை தட்டுவதில் எந்த பயனும் இல்லை. ஒட்டுமொத்தமாக வென்று அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் அனைத்தையும் தமிழர்களிடம் வரவேண்டும்.

தமிழ் படித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் வேலை என்ற நிலை உருவாகும். அரசு பள்ளிக் கூடங்களின் தரம் உயரும். அரசின் அனைத்து துறையினரின் குழந்தைகளும் அரசு பள்ளிக்கூடம், கல்லூரியில் படிக்க வேண்டும். அப்படி படிக்க வைக்காதவர்களின்  ஊதியத் தில்  பாதி பிடித்தம் செய்யப்படும். முதலமைச்சர் முதல் அனைத்து அரசுத்துறையினரும் அரசு மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற வேண்டும். இல்லை என்றால்  அவர்களது ஊதியமும்  பாதியாகக் குறைக்கப்படும்.

ஏற்கெனவே சமஸ்கிருதத்தை கலந்து பேசி தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பிரிந்து விட்டது. இப்போது நாம் ஆங்கிலத்தை கலந்து தங்கிலீஸ் பேசிக்கொண்டு இருக்கிறோம். கடைகளின் விளம்பர பலகைகளில் கூட தமிழ் இல்லை. இந்த நிலை எல்லாம், நாம் தமிழர் ஆட்சிப்பொறுப்பு ஏற்ற ஒரே நொடியில் மாற்றப்படும். இப்போது யாரும் தாய் மொழியில் கையெழுத்து போடுவதில்லை. பெயரின் முதல் எழுத்தான தந்தை பெயரைக்கூட தமிழில் எழுத முடியாதவர்களாக இருக்கிறோம். 

நான் கேட்கிறேன், பெயரின் முதல் எழுத்தை ஆங்கிலத்தில் எழுதுகிறாயே என் அப்பன் வெள்ளைக்காரனா. ஆங்கிலேயன் அவன் பெயரின் முதல் எழுத்தை தமிழில் எழுதுவானா. நாம் தமிழ்நாடாக இல்லாமல், இங்கிலாந்தின் ஒரு பாகமாக செயல்படுகிறோம். இப்படி இருக்கும்போது எப்படி மொழி விடுதலை அடைய முடியும். னைவருக்கும் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும். இலவசம் கிடையாது. விவசாயத்துக்கு அரசு ஊதியம் வழங்கும். உற்பத்தி பொருட்களை அரசே விற்றுக்கொள்ளும்.

தமிழ்நாட்டில் குவிந்து இருக்கும் வடமாநிலத்தவர்கள் அனைவரும் நாம் தமிழர் ஆட்சி அமைந்ததும் பெட்டி படுக்கையை தூக்கிக்கொண்டு அவர்களின் சொந்த மாநிலத்துக்கு சென்று விடுவார்கள்.  இப்போது 1½ கோடிபேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர்களில் 20 லட்சம்பேர் வாக்கு உரிமை பெற்று இருக்கிறார்கள். அவர்கள் நமக்கு வாக்களிக்க மாட்டார் கள். எப்படி தமிழர் குடியிருப்பில் சிங்களவர்களை வைத்து தமிழர்களை விரட்டினார்களோ, அதே நிலை தமிழ்நாட்டுக்கு வர இருக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும்.

 

எந்த வேலையையும் செய்வது இழிவானது அல்ல. வேலை செய்யாமல் இருப்பதே இழிவானது என்று தமிழர்களின் மனநிலையில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். அதன் மூலம் வடமாநி லத்தவர்களை வெளியேற செய்ய முடியும். அனைத்தும் தலைகீழாக மாறி உள்ளது. அனைத் தையும் சரி செய்ய வேண்டும். தமிழகம் என்ன செய்வது என்று தெரியாத கையறு நிலையில் உள்ளது. அரசியல் விடுதலை, ஜனநாயக புரட்சி பெற வேண்டும் என்றால் விவசாயி சின்னத் துக்கு வாக்களிக்க வேண்டும்.


50 ஆண்டுகாலமாக எதுவும் செய்யாதவர்கள் இனிவரும் 5 ஆண்டுகள் என்ன செய்யப் போகிறார்கள். இந்த தேர்தல் வரலாறு நமக்கு தந்து உள்ள வாய்ப்பு. நமக்கான தேர்தல். தன்மானம் வெற்றி பெறும் தேர்தல். எங்கள் வேட்பாளர்கள் பணம் உள்ளவர்களாக இல்லாமல் இருக்கலாம். இந்த சமூகத்துக்கான மாற்றத்தை கொண்டுவருபவர்கள். என் மொழி தெரியாதவன் கடவுளாக இருக்க முடியாது. என் வலி தெரியாதவன் தலைவனாக இருக்க முடியாது. நாங்கள் உங்கள் வலி தெரிந்தவர்கள்.


 அதிமுக வெற்றி பெறும், திமுக வெற்றி பெறும். அதிமுக-திமுக வெற்றி பெறுவது என்பது ஒரு சாதாரண நிகழ்வு.  அது அடிக்கடி நடந்து வந்து இருக்கிறது. அதிமுக, திமுகவின் வெற்றிகள் ஒரு சம்பவம். ஆனால் நாம் தமிழர் கட்சியின் வெற்றி என்பது வரலாறு. மாற்றத்தை விரும்பும் மக்களின் பெருங்கனவுக்கான வெற்றி  என்றார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

Top