logo
 பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று பிரதமர் நிதியிலிருந்து  ஆக்சிஜன் செறிவூட்டும் மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு:.மத்திய அமைச்சர் தகவல்

பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று பிரதமர் நிதியிலிருந்து ஆக்சிஜன் செறிவூட்டும் மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு:.மத்திய அமைச்சர் தகவல்

10/Aug/2021 11:54:26

ஈரோடு, ஆக: பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரதமர் நிதியில் இருந்து ஆக்சிஜன் செறிவூட்டும் மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் பெருந்துறை  எம்எல்ஏவுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தார். 

கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு தீவிரமாக இருந்த நிலையில் மத்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அந்தந்த மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரதமர் நிதியிலிருந்து ஆக்சிஜன் செரிவூட்டு மையம் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் ஈரோடு மாவட்டத்திற்கு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டும் மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு மையமாக செயல்பட்டு வரும் வேளையில், கோவை,சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களைச் சார்ந்த கொரோனா  பாதிக்கப்பட்ட அனைவரும் அதிக அளவில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதால்,

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செரிவூட்டு மையம் அமைக்க வேண்டும் எனவும் அதற்கு, பிரதமர் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் கடந்த 25/05/2021 -இல் அப்போதைய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மாண்புமிகு ஹர்சவர்தன்-க்கு பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார் கடிதம் எழுதியிருந்தார். 

இதனையடுத்து தற்போது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வேதியியல் மற்றும் உரத் துறை இணை அமைச்சர் மாண்புமிகு மன்சுக் மாண்டவியா அவர்கள் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயக்குமாருக்கு எழுதிய கடிதத்தில் ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய  இரண்டுக்கும் தனித்தனியாக ஆக்ஸிஜன் செறிவூட்டும் மையங்கள் அமைக்க பிரதமர் நிதியிலிருந்து  ஒதுக்கீடு செய்திருப்பதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். 

பெருந்துறை சட்டமன்ற தொகுதி மக்களின் சார்பாக பாரதப் பிரதமர் மோடிக்கும்,  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார் கூறினார்.

Top