logo
மக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளால் தொற்று நோய் பரவும் அபாயம்

மக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளால் தொற்று நோய் பரவும் அபாயம்

05/Oct/2020 11:03:36

புதுக்கோட்டை நகரில் பல்வேறு பகுதிகளில்  மக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள பிற நகரங்களுக்கு முன்  மாதிரியாகத்திகழ்ந்தது புதுக்கோட்டை. இந்த நகரமைப்பை பார்த்து வியக்காதவர்களே இல்லை என்ற பெருமையுடையது. ஆனால், தற்போது அந்தப்பெருமைகள்  சிறுமையாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளத சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

புதுகை நகராட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தூய்மைப்புதுகை மற்றும் பசுமைப்புதுகை என்ற கோஷத்தை முன் வைத்து நகர் முழுவதும் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கில் மரங்கள் நடப்பட்டன. மேலும், நகரைத்தூய்மையாக வைத்திருக்கும் வகையில் புதிய குப்பை லாரிகள் மற்றும் தெருவோர டம்ளர் பிளேசர் எனும் குப்பை சேமிப்பு அமைப்புகளும் பல பகுதிகளில் வைக்கப்பட்டு அதில் சேரும் குப்பைகளை தினமும் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனஆனால், கடந்த 6 மாதங்களாக உலகை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் கொரோனா நோய் தாக்கம் காரணமாக அனைத்து கட்டமைப்புகளும் நிலை குலைந்து போனது. குறிப்பாக, கண்ணுக்குத்தெரியாத இந்த நோயைக்கட்டுப்படுத்த என்ன வழியைத் தேடுவது என்று உலக சுகாதார நிறுவனம் விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறது.

அரசு இயந்திரங்களின் அனைத்துப் பிரிவுகளுமே கொரோனா நோய் தடுப்புக்காக களமிரக்கப்பட்டுள்ளன. இதில், சுகாதாரத்துறை  களத்தில் முன்னின்று மக்களையும் சுற்றுப்புற சுகாதாரத்தையும் கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், புதுக்கோட்டை நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் வைத்து அதில் சேரும் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. ஆனால், பேரங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே புதிதாக வைக்கப்பட்டுள்ள இந்தக் குப்பைத் தொட்டியில் கொட்டப்படும் குப்பையிலிருந்து வரும் துற்நாற்றம் அருகில் நிற்கும் பயணிகளுக்கு நோய்தொற்றை உருவாக்கும் அபாயம் உள்ளது.இதை வேறு இடத்திற்கு மாற்ற நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்

Top