logo
வேளாண் துறை தனி பட்ஜெட்டில் விவசாயிகள் விளை பொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம்: அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தேசிய தலைவர் பெரியசாமி

வேளாண் துறை தனி பட்ஜெட்டில் விவசாயிகள் விளை பொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம்: அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தேசிய தலைவர் பெரியசாமி

10/Aug/2021 11:09:03

புதுக்கோட்டை, ஆக:  விவசாயிகளால்  உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு எம். எஸ். சாமிநாதன் பரிந்துரையின்படி விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.100 நாள் வேலை திட்ட பணிகளை விவசாய பணிகளுக்கும் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தேசிய தலைவர் பெரியசாமி.

புதுக்கோட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ,கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தேசிய தலைவருமான பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம்  மேலும்  அவர் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் கிராமங்கள் தோறும் மக்கள் நாடாளுமன்றத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்த உள்ளது.  இதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.

கடுமையான நிதி நெருக்கடியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது இதில் தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது. நேற்று வெளியிட்ட வெள்ளை அறிக்கையை வைத்து, தற்போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி, இலவச பயணங்களை ரத்து செய்து விடக்கூடாது.

தமிழகம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவு திறந்து, விவசாயிகள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்வதற்கு, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வரவேற்கத்தக்கது. 

இதில் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இந்த நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க எம்எஸ் சாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை அரசு வழங்க வேண்டும்.

100 நாள் வேலை திட்ட பணிகளை விவசாயப் பணிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். பணி நாட்களை 200 நாட்கள் ஆக உயர்த்தி,  தினக்கூலியாக ரூ.500 வழங்க வேண்டும்.தமிழக அரசு விவசாய வேலைவாய்ப்பு அலுவலகம் என்ற அமைப்பை உருவாக்கி, அதில் யார் யார் விவசாய வேலை செய்ய விரும்புகிறார்களோ அவர்கள் பதிவு செய்து,  விவசாயம் தொடர்பான பணிகளை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்ய முடியாது. ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும்தான் செய்ய முடியும் . ஆனால் சில கொள்கை முடிவுகளை எடுத்து, தமிழக அரசு அவர்களை நிர்பந்தம் செய்ய முடியும்.

அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும். நகை கடன்களை உடனடியாக தமிழக அரசு தள்ளுபடி  செய்ய வேண்டும் என்றார். இதில் நிர்வாகிகள் மாதவன், கே.ஆர். தர்மராஜன், எம்.என். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


 


Top