logo
வெளிமாநிலத்திலிருந்து மீட்கப்பட்ட பெண் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு: மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

வெளிமாநிலத்திலிருந்து மீட்கப்பட்ட பெண் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு: மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

06/Aug/2021 03:16:40

புதுக்கோட்டை, ஆக: வெளிமாநிலத்திலிருந்து மீட்கப்பட்ட பெண்  மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு கடந்த  2.8.2021 -ஆம் தேதி அன்று பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், ஒளியமங்கலத்தைச் சேர்ந்த  பவித்ரா என்ற பெண்ணின் பெற்றோர் வெள்ளையம்மாள் ராமன்,  தனது பெண் மகாராஷ்டிராவில் அவரது கணவரால் கொடுமைப்படுத்தப்படுவதாக, வீடியோ சாட்சிகள் மூலம் நேரடியாக புகார் அளித்தனர்.  இந்தப்  புகார் மற்றும்  சாட்சிகள் அடிப்படையிலும் மாவட்ட சமூகநல அலுவலருக்கு அப்பெண்ணை மீட்க ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதையடுத்து,  புதுக்கோட்டை ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் மகாராஷ்டிரா மாநிலம் ரெய்காட் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருங்கிணைந்த சேவை மையத்தை தொடர்பு கொண்டு, உடனடியாக அப்பெண்ணை மீட்கும்படி அறிவுறுத்தப்பட்டது. 2.8.2021 அன்று மாலை மகாராஷ்டிரா மாநிலம், ரெய்காட் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருங்கிணைந்த சேவை மைய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு ,விஸ்ணுநகருக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஒரு வயது ஆண் குழந்தையை மீட்டு  சேவை மையத்தின் பாதுகாப்பில் வைத்திருந்தனர்.

 இதையடுத்து, 4.8.2021 அன்று  ரயில் மூலம் அப்பெண் மற்றும் அவரது குழந்தை புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.   5. 8.2021 -ஆம் தேதி பிற்பகல்   3 மணியளவில் திருச்சி ரயில் நிலையம் வந்தடைந்த பவித்ரா மற்றும் அவரது குழந்தை  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கவிதாராமு முன்னிலையில் பவித்ரா, குழந்தையும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். புகார் அளித்த  4 நாட்களுக்குள் மீட்கப்பட்டு  தாயும் குழந்தையும் மீட்க அதிரடி நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சியருக்கு   மீட்கப்பட்ட பெண்ணும் அவரது பெற்றோரும் கண்ணீர் மல்க  நன்றி தெரிவி்த்தனர்.

Top