logo
 புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தில் மக்களைத் தேடி மருத்துவ திட்டம்:  அமைச்சர் மெய்யநாதன் தொடக்கி வைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தில் மக்களைத் தேடி மருத்துவ திட்டம்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கி வைப்பு

06/Aug/2021 02:58:06

புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கொத்தமங்கலத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடந்த  மக்களைத் தேடி மருத்துவம்  திட்டத்தை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  தொடக்கி வைத்தார்.

பின்னர், அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: தமிழக முதல்வர்  மக்களைத் தேடி மருத்துவம்  என்கிற சிறப்பான திட்டத்தை  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில்,  திருவரங்குளம் ஒன்றியம், கொத்தமங்கலத்தில் மக்களைத் தேடி மருத்துவம்  திட்டம் தொடக்கி  வைக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தில் உள்ளடங்கிய செயல்பாடுகள் மிக மிக அற்புதமானது. கிராமங்களில் சக்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற பிற நோய்களாலும் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ அல்லது தாலுகா மருத்துவமனைகளிலோ, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலோ நேரடியாக சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை இருந்தது.

இதை மாற்றி நோயாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாக சென்று  2 மாதங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கும் வகையில்  இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஒவ்வொரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்களின் பட்டியல்களை கொண்டு, சுழற்சி முறையில் நடமாடும் மருத்துவ சிகிச்சை வாகனம் மூலம் , இல்லத்திற்கு நேரடியாக சென்று 2 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் வழங்கப்பட உள்ளது. 


இதில் 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு தொற்றா நோய்களுக்கான மருந்துகள் வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை சேவைகள், டயாலிசிஸ் எனப்படும் சிறுநீர் கலவை பிரிப்புக்கு தேவையான திரவ விநியோகம் மகப்பேறு பராமரிப்பு, குழந்தை தடுப்பூசி போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப் படுகின்றன. 

 திருவரங்குளம் வட்டாரத்தில் 5,840 நபர்கள் பயன்பெற உள்ளனர். பொதுமக்கள் கோவிட் தொற்றை தடுக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற அரசின் கோவிட் தடுப்பு வழிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும்.  குழந்தைகள் வைத்துள்ள தாய்மார்களும் தவறாமல் கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

 கொத்தமங்கலத்தில் வெள்ளிக்கிழமை தினம் 10 இடங்களில் கோவிட் தடுப்பூசி  செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. கொத்தமங்கலம் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

 இப்பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, பள்ளி சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை நிறைவேற்ற  நடவடிக்கை  எடுக்கப்படும் என்றார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

இதில்,பொது சுகாதாரத் துணை இயக்குநர் கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, ஒன்றியக்குழுத் தலைவர்கள் வள்ளியம்மை தங்கமணி, மகேஸ்வரி சண்முகநாதன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் ஆனந்தி இளங்கோவன், ஊராட்சித் தலைவர் சாந்தி வளர்மதி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மங்கையற்கரசி இராமநாதன், விஜயா செல்வராஜ்  உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.  


Top