logo
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு தொடர்பான புதிய அரசாணையை நிறுத்தி வைக்க வீரசைவ பேரவை கோரிக்கை

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு தொடர்பான புதிய அரசாணையை நிறுத்தி வைக்க வீரசைவ பேரவை கோரிக்கை

03/Aug/2021 02:22:53


புதுக்கோட்டை, ஆக: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள் இடஒதுக்கீடு தொடர்பான புதிய அரசாணையை நிறுத்தி வைக்க புதுக்கோட்டை மாவட்ட வீரசைவ பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, புதுக்கோட்டை மாவட்ட வீரசைவ பேரவை சார்பில் தமிழக முதல்வருக்கு மாவட்ட ஆட்சியர் வழியாக அளித்துள்ள மனு விவரம்: 

புதுக்கோட்டை மாவட்ட வீரசைவப் பேரவை என்ற அமைப்பை 20/1995 அரசு பதிவின் மூலம் நடத்தி வருகிறோம் .  எங்கள் வீரசைவம் பேரவையில் ஐங்கம், ஜோகி யோகிஸ்வரர், ஆண்டிப்பண்டாரம் ஆகிய உட்பிரிவு சாதிகள் இதில் இணைந்துள்ளன. மேற்படி எங்கள் நான்கு உட்பிரிவுகளைச் சார்ந்த மக்கள்  தமிழ்நாட்டில் 40 லட்சத்திற்கு மேலான எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர்.

எங்களில் பெரும்பாலானோர்கள் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பூஜை செய்யும் பணியையும், விவசாயப் பணியையும், பூக்கட்டும். தொழிலையும் செய்து வருகின்றனர். அரசுப்பணியில் மிகக்குறைந்தவர்களே உள்ளனர்.

இந்நிலையில், வன்னியருக்கு உள் ஒதுக்கீடு என்ற பெயரில் 10.5 சதவீதம் வழங்கியும், சீர்மரபினருக்கு 7 சதவீதம் மற்றும் மிகவும் பிற்பட்ட மக்களுக்கு 2.5 சதவீதம் என அரசு ஆணை வெளியிட்டதன் மூலம் மிகவும் பிற்பட்ட எளிய நிலையிலும், வறுமையிலும், வாழும் பிற 40 சாதிகளைகளைச் சார்ந்த (எம்.பி.சி)  மக்களுக்கு 2.5 சதவீதம் உள்ஒதுக்கீடு என்பது கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். அதில், எங்கள் சமுதாய மக்களும் பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

எனவே, தமிழக அரசு, அரசு ஆணை (எண். 75 நாள்.28.07.2021)யை  நிறுத்தி வைக்கவும், முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, உரிய இடஒதுக்கீடு வழங்கும் வகையில் 2022-2023 கல்வியாண்டில்  கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கியும், அதுவரை புதிய அரசு ஆணைக்கு தடைவிதிக்குமாறு வேண்டுகிறோம். சமத்துவம் சமூக நீதி,நிலைக்க தமிழக அரசு தங்கள் தலைமையில் சிறப்பாக செயல்படும் என நம்புவதாகவும் இந்த மனுவில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.


Top