logo
கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி.ரா மறைவு:  தமுஎகச மாநிலக்குழு  புகழஞ்சலி

கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி.ரா மறைவு: தமுஎகச மாநிலக்குழு புகழஞ்சலி

19/May/2021 03:38:12

தமிழில் வட்டார வழக்குச் சொல்லகராதியினை முதலில் உருவாக்கியவர், தமிழின் ஆகச்சிறந்த கதை சொல்லி, மக்கள்மொழியின் வழிகாட்டி, கடித இலக்கியத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர், நாட்டார் வழக்காறுகளைத் தொகுத்தவர் நாவலாசிரியர் கி.ரா என்றழைக்கப்படும் ராயங்கல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயணப்பெருமாள் ராமானுஜன் 17.5.2021  இரவு புதுச்சேரியில் காலமானார்.

இவரது  மறைவுக்கு  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலக்குழு  புகழஞ்சலி செலுத்தியுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவர்(பொறுப்பு) மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

எழுத்தாளர்  கி.ரா. அடிப்படையில் ஒரு விவசாயி. முப்பத்தைந்து வயசுக்குப் பிறகு எழுத ஆரம்பித்து தமிழ் இலக்கியத்தில் உன்னதமான இடத்தைப் பிடித்தவர். தமிழ் இலக்கியவெளியை ஆக்கிரமித்திருந்த மேட்டிமை மொழியை உடைத்து, மக்களின் பேச்சுமொழியை உயர்த்திப்பிடித்த கலகக்காரர்.

இவரது முதல் சிறுகதை மாயமான் சரஸ்வதி இதழிலும், அதைத்தொடர்ந்து இவரது கதவு சிறுகதை தாமரை இதழிலும் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றன. கரிசல்காட்டு சம்சாரிகளின் பாடுகளை தமிழ் இலக்கியத்தில் ஆழமாகப் பதிவுசெய்தவர் கி.ரா.

இவரது முதல் நாவலான கோபல்ல கிராமம் வந்த புதிதில், நாவலுக்கான எந்த இலக்கணங்களும் அதில் இல்லை என்று பல முன்னணி எழுத்தாளர்களால் நிராகரிக்கப்பட்டது. அதுவே பல பதிப்புகள் கண்டு தற்போதும் பலராலும் கொண்டாடப்படும் படைப்பாக காலத்தை வென்று நிற்கிறது.

இடைசெவலில் விவசாயிகள் சங்கத்தை உருவாக்கியவர் கி.ரா. ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்தவர். இவருடைய நெருக்கமான நண்பரும் எழுத்தாளருமான கு.அழகிரிசாமியுடன் இணைந்து இடதுசாரி இயக்கத்தைக் கட்டமைத்தவர். சமகாலத்தில், பா.செயப்பிரகாசம், வீர.வேலுச்சாமி, பூமணி, .தமிழ்ச்செல்வன், தேவதச்சன், சோ.தர்மன், சூரங்குடி முத்தானந்தம், கழனியூரன், கோணங்கி, உதயசங்கர், கௌரிஷங்கர், அப்பாஸ், நாறும்பூநாதன், அப்பணசாமி, சாரதி, திடவை பொன்னுசாமி என எழுத்தாளர்கள் பலரும் உருவாகக் காரணமாக இருந்தவர் கி.ரா.

னக்கு மொத்தம் நான்கு தலைகள். முதல் தலை சங்கீதம் தான். ரெண்டாவது தலை அரசியல். மூணாவது தலை இலக்கியம். நாலாவது எனது சொந்தத்தலை  என்று சொல்லும் கி.ரா. சங்கீதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இளம் வயதில், நாதஸ்வர வித்துவான் குருமலை பொன்னுச்சாமி பிள்ளையிடம் சங்கீதம் கற்றவர். விளாத்திகுளம் சுவாமிகள், காருகுறிச்சி அருணாச்சலம், வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.

எண்பதுகளின் துவக்கத்தில் உதயசங்கர், மாரிஸ், முருகன்  ஆகியோர் துணையுடன் கரிசல் சொல்லகராதி யைத் தயாரித்து வெளியிட்டார். தமிழில் முதல் முயற்சி இது. ஒரு பல்கலைக்கழகம் செய்திருக்கவேண்டிய பணி இது.

கோபல்ல கிராமம் நாவலின் தொடர்ச்சியாய் இவர் எழுதிய கோபல்லபுரத்து மக்கள் நாவலுக்கு 1991-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. திருநங்கைகளின் துயரங்களைப் பற்றி அறுபது வருடங்களுக்கு முன்பே கோமதி என்ற சிறுகதையில் பதிவுசெய்தவர் கி.ரா. அவரது முக்கியமான சிறுகதை நெருப்பு. கிராமத்தில் நள்ளிரவில் வீடுகள் தீப்பற்றி எரிகின்றன.

அம்மை கண்ட குழந்தை ஒன்று எரிகிற வீட்டில் கிடக்கிறது. அதைக்காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்துப் பாய்ந்தவள் அவ்வூரின் சேரியைச் சேர்ந்த பெண். கடைசியில் இருவருமே இறந்து கரிக்கட்டையாய்ப் போகிறார்கள். இரண்டு பிரேதங் களும் சேர்ந்தே கிடக்கின்றன.

நெருப்புக்கு தீண்டாமை உண்டா, இரண்டு உயிர்களின் சாதி தெரியுமா நெருப்புக்கு என்பதான கேள்விகளை எழுப்புவதாய் அக்கதையை எழுதியிருப்பார் கி.ரா. குழந்தைகளுக்காக அவர் எழுதிய பிஞ்சுகள் என்ற குறுநாவல் குறிப்பிடத்தக்க படைப்பு. பறவைகளைப் பற்றியும், பறவைகளின் விதவிதமான முட்டைகளைப் பற்றியும் பல தகவல்கள் பிரமிக்கவைக்கும்.

இந்தியாவில் பல படைப்பாளிகள் நூறு வயதுவரை வாழ்ந்திருந்தாலும், தனது கடைசிமூச்சு வரை பேனா பிடித்து எழுதியவர் அநேகமாய் கி.ரா ஒருவர் மட்டுமே இருக்கக்கூடும். 97வது வயதில் அவர்  அண்டரெண்ட பட்சி குறுநாவலை தனது அழகான  கையெழுத்தில் எழுதி வெளியிட்டார். இதை யாரும் அச்சிட வேண்டாம் என்றே சொல்லிவிட்டார். சமீபத்தில் வெளியான மிச்சக்கதைகள்  அவரது நினைவிலிருந்து எழுதப்பட்ட தொகுப்பு.

அவரை புதுச்சேரி படைப்பாளிகளும், மக்களும் கடந்த 25 ஆண்டுகாலமாக பாதுகாத்திருக்கிறார்கள். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராக பணியாற்றிய பெருமை இந்த ஏழாங்கிளாஸ் பெயிலான மாணவனுக்கு கிடைத்தது என்று அடிக்கடி சொல்வார் அவர். தனது படைப்புகளின் உரிமையை வாசகர் ஒருவருக்கு எழுதிவைத்த முதல் எழுத்தாளர் கி.ரா. அந்தப் பெருமையைப் பெற்றவர் புகைப்படக்கலைஞர் புதுவை இளவேனில்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநாடுகளிலும் நிகழ்வுகளிலும் பங்கேற்று கி.ரா வெளிப்படுத்திவந்த தோழமை நினைவுகூரத்தக்கது. கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏரான கி.ரா அவர்களுக்கு தமுஎகச தனது அஞ்சலியைச்  செலுத்துகிறது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

எழுத்துசார்ந்த பலவிசயங்களைத் தொடங்கிவைத்த கி.ரா அவர்களுக்கு, தமிழ்நாட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் முதல் எழுத்தாளர் என்கிற சிறப்பினையும் நல்கியுள்ள தமிழ்நாடு அரசின் அணுகுமுறை வரவேற்கத்தக்கது.

 

Top