logo
 ஈரோடு மாவட்டத்தில் மேலும் 171 பேருக்கு தொற்று: 4-ஆவது நாளாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 171 பேருக்கு தொற்று: 4-ஆவது நாளாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

01/Aug/2021 10:21:33

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டத்தில் மேலும் 171 பேருக்கு தொற்று. தொடர்ந்து   4-ஆவது நாளாக அதிகரிக்கும் கொரோனா தொற்று அதிகரித்து வருவது அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2 - ஆம் அலையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். ஏராளமானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொடர்ந்து இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டனர். இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைய ஆரம்பித்தது. 

எனினும், சென்னை கோவை, ஈரோடு போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து பரவல் அதிகமாக இருந்தது. குறிப்பாக  ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தது. தினசரி பாதிப்பில் கோவைக்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தில் இருந்து வந்தது.

இந்நிலையில்,  ஈரோடு மாவட்ட சுகாதார துறையினர், மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி அதை ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுமட்டுமின்றி வீடு வீடாக சளி காய்ச்சல் உள்ளதா என சோதனை செய்யப்பட்டு அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் வீடுகளுக்கே வந்து எடுக்கப்பட்டது. நோய் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உடனுக்குடன் அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டதால்  தொற்று குறைய தொடங்கியது. 

பாதிப்பு உச்சகட்டத்தில் இருந்தபோது நாள் ஒன்றுக்கு 1874 பேருக்கு தொற்று ஏற்பட்டது. பின்னர் படிப்படியாக குறைந்து 100 -க்கும் கீழாக குறைந்தது.  கடந்த ஒன்றரை மாதமாக தினசரி பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.  சென்னை, கோவையை தொடர்ந்து ஈரோட்டிலும் தற்போது பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 27 -ஆம் தேதி தினசரி பாதிப்பு 127 ஆக இருந்தது. 28 ஆம் தேதி 140 ஆக உயர்ந்தது. 29-ஆம் தேதி 166 ஆக மேலும் அதிகரித்தது.

இந்நிலையில் , 30 -ஆம் தேதி சுகாதார துறையினர் வெளியிட்ட புள்ளிவிவரப்படி 171 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில், இதுவரை பார்த்தவர்கள் எண்ணிக்கை 97 ஆயிரத்து 532 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 127 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 91 ஆயிரத்து 495 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  மாவட்டத்தில் இதுவரை 633 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 1404 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மக்கள் பொது இடங்களில் அதிகமாகக் கூட்டம் கூடுவது, வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மூலம் பரவுவது, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காதது போன்ற அலட்சியம் காரணமாக மீண்டும் மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வருகிறது.

மக்கள் தடுப்பூசி போட்டு விட்டோம் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். அதைப்போல் முக கவசத்தை முறையாக அணியாமல் இருக்க வேண்டாம் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Top