logo
பாஸ்போர்ட், விசா இல்லாமல்பெருந்துறையில் தங்கி   வேலை பார்த்தபோது கைதான வங்க தேசத்தினர் 10 பேர் புழல் சிறையில் அடைப்பு

பாஸ்போர்ட், விசா இல்லாமல்பெருந்துறையில் தங்கி வேலை பார்த்தபோது கைதான வங்க தேசத்தினர் 10 பேர் புழல் சிறையில் அடைப்பு

30/Jul/2021 11:22:06

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டத்தில் ஏராளமான தொழிற் சாலைகள், நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். குறிப்பாக பெருந்துறை பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இதில் குற்றப்பின்னணி உள்ளவர்கள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதையடுத்து ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அந்தந்த தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் வடமாநிலத்தவர்கள் பற்றிய விவரம் அவர்களது பின்னணி குறித்து முழுவதுமாக தெரிந்த பின்னேரே  பணியில் அமர்த்த வேண்டும் என போலீசார் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையம்  கியாஸ் குடோனில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வங்காளதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது  வங்க தேசத்தை சேர்ந்த முகமது மொட்டி ரகுமான் (52), முகமது சொராத் காஜி (40), ரபூல் காஜி (20), முகமது மோக்சத் அலி (43), முகமது அன்சாரி ரகுமான் (32), மொனி ரூல் இஸ்லாம் (32), முகமது சபிக்குல் இஸ்லாம் (40), முகமது அஸ்ரம் உஸ்மான், ஹாரிபுல் இஸ்லாம்(28), சபுல்இஸ்லாம் (41) ஆகிய 10 பேர் தங்கி இருப்பது தெரியவந்தது. 

அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் அனைவரும் வேலை தேடி  சட்டவிரோதமாக மேற்கு வங்க மாநிலத்திலிருந்து  இங்கு வந்து சில மாதங்கள் தங்கி கட்டிட வேலை பார்த்தது தெரியவந்தது. 

அதன் பின்னர் தெரிந்தவர்கள் மூலம் ஈரோடு, பெருந்துறை ,மணிக்கம் பாளையத்திற்கு வந்து கட்டிட தொழிலாளியாக பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் தனித் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்துள்ளனர்.

ஈரோடு மாவட்ட எஸ்பி  சசிமோகன்  விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் சட்டவிரோதமாக இங்கு வந்து வேலை பார்த்ததை ஒப்புக்கொண்டனர். மேற்கு வங்கத்தில் இருந்து ரயில் மூலம் ஈரோடு வந்துள்ளனர். பின்னர் பெருந்துறையில் தங்கி வேலை பார்த்து வந்தார். அவர்களிடம் பாஸ்போர்ட் ,விசா போன்ற முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை.  பின்னர் அவர்கள் 10 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, ஈரோடு மாவட்டம் முழுவதும் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களில் வெளிநாட்டவர்கள் யாராவது சட்டவிரோதமாக வேலை செய்து வருகிறார்களா? என்பதை கண்காணிக்க மாவட்ட எஸ்பி  சசிமோகன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தொழிற்சாலைகளுக்கு சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.

Top