logo
இணையவழிக் கல்விக்கு ‘நாக்’ அங்கீகாரம் அவசியம்: யுஜிசி தகவல்

இணையவழிக் கல்விக்கு ‘நாக்’ அங்கீகாரம் அவசியம்: யுஜிசி தகவல்

04/Oct/2020 09:52:18

இணையவழிக் கல்வியை மேற்கொள்ளும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு ‘நாக்’ அங்கீகாரம் கட்டாயம் என்று யுஜிசி வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வியைத் தொடர்ந்து இணைய வழிக் கல்வி முறைக்கும் யுஜிசி முக்கியத்துவம் வழங்கி வருகிறது. அதன்படி, நிகழாண்டிலிருந்து தொலைதூரக் கல்வியை மேற்கொள்ளும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு புதிய நெறிமுறைகளை கடந்த ஜனவரி மாதம் யுஜிசி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, இணையவழி கல்வியை மேற்கொள்ளும் கல்வி நிறுவனங்களுக்கான புதிய நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.

இது குறித்து யுஜிசி வெளியிட்ட அறிவிப்பு: இணையவழிக் கல்வியை தொடங்கவுள்ள உயர்கல்வி நிறுவனங்கள் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சிலின் (நாக்) மதிப்பீட்டில் 3.26 மதிப்பெண் அல்லது தேசிய கல்வி நிறுவனத் தரவரிசையில் (என்ஐஆர்எப்) 100 இடங்களுக்குள் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். சுழற்சி அடிப்படையில் அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது குறைந்தது 2 முறையாவது தரவரிசையில் இடம் பெற்றிருக்கவேண்டும்.

யுஜிசியின் முன்அனுமதி இல்லாமல் தொடங்கப்பட்ட இணைய வழிக் கல்விக்கு அனுமதி வழங்க புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. உயர்கல்வி நிறுவனங்கள் குறைந்தது 3 இளநிலை பாடப்பிரிவும், 10 முதுநிலைப் படிப்பும் தொடங்க வேண்டும். விதிமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பாக பிரமாணப் பத்திரம் ஒன்றை உயர்கல்வி நிறுவனங்கள் யுஜிசியிடம் தாக்கல் செய்யவேண்டும். கல்வி நிறுவனங்கள் கூடுதல் பாடப்பிரிவுகளைத் தொடங்குவதாக இருந்தால் அதற்கான முன் அனுமதியைப் பெறவேண்டும்.

இணையவழிக் கல்வி மேற்கொள்ள விரும்பும் நிறுவனங்கள் அக்டோபர் 15-ஆம் தேதி விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான கூடுதல்  விவரங்களை  இணையதளத்தில் காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Top