logo
மக்கள் நலன்காக்கும் திட்டங்களை  நிறைவேற்றும்  அரசாக தமிழக அரசு செயல்படுகிறது: சட்டஅமைச்சர் எஸ். ரகுபதி

மக்கள் நலன்காக்கும் திட்டங்களை நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது: சட்டஅமைச்சர் எஸ். ரகுபதி

25/Jul/2021 10:29:36

புதுக்கோட்டை, ஜூலை:  மக்கள் நலன்காக்கும் திட்டங்களை  நிறைவேற்றும்  அரசாக தமிழக அரசு செயல்படுகிறது என்றார் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், கலியரான்விடுதியில் புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கத்தினை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.  

பின்னர் அமைச்சர்  பேசியதாவது:  தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், கலியரான்விடுதியில் புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்பேருந்து கறம்பக்குடியிலிருந்து கலியரான்விடுதி வழியாக ராங்கியன்விடுதி, வெட்டுவாகோட்டை, ஊரணிபுரம் வரையிலும், கந்தர்வக்கோட்டையிலிருந்து கலியரான்விடுதி வழியாக  மட்டங்கால், வேம்பன்பட்டி, கல்லாகோட்டை 4 ரோடு, ஊரணிபுரம் வரையிலும் தினமும் 4 நடைகள் இயக்கப்பட உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.


தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே வேறு யாரும் அறிவிக்காத திட்டமான மகளிர் அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்ற திட்டம்  தற்பொழுது  நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் அரசு நகரப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர். இதே போன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளும் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில் ஏற்கெனவே நிறுத்தப்பட்ட வழிதடங்களில் பேருந்துகள் பொதுமக்களின் நலன் கருதி தற்பொழுது மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் இதுவரை பேருந்து வசதி இல்லாத கலியரான்விடுதியில் இன்றையதினம் பேருந்துவசதி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதே போன்று பேருந்து வசதி இல்லாத கிராமங்கள் கண்டறியப்பட்டு அந்த கிராமங்களுக்கு பேருந்து வசதி தற்பொழுது ஏற்படுத்தப்படும்.  

பொதுமக்களிடமிருந்து பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் இயக்க கோரிக்கை வரப்பெற்றுள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகேற்ப பேருந்து வசதிகள் ஏற்படுத்தவும், புதிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்து வசதிகள் ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் தேவை அறிந்து மக்கள் நலன்காக்கும் வகையில் திட்டங்களை நிறைவேற்றும்  அரசாக தமிழக அரசு செயல்படுகிறது என்றார்  அமைச்சர் எஸ்.ரகுபதி.

இந்நிகழ்வில், முன்னாள் ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் எம்.ராமச்சந்திரன், முன்னாள் அரசு வழக்குரைஞர் கே.கே.செல்லப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் இளங்கோவன், ஒன்றியக்குழு தலைவர் .மாலா ராஜேந்திரதுரை உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.  


Top