logo
ஈரோடு சத்தியமங்கலம் பகுதியில்  விலை சரிவால் விவசாயிகள்  பூக்களை சாலையில்  கொட்டும் அவலம்..

ஈரோடு சத்தியமங்கலம் பகுதியில் விலை சரிவால் விவசாயிகள் பூக்களை சாலையில் கொட்டும் அவலம்..

01/May/2021 05:35:46

ஈரோடு,மே: ஈரோடு சத்தியமங்கலம் பகுதியில்  விலை சரிந்து போனதால்  பூக்களை சாலையில் விவசாயிகள்  கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கோவில்களில் பக்தர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பூக்களின் விலை மற்றும் விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால்  மலர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பூக்களை விற்பனைக்கு எடுத்துச் செல்லாமல்  சாலையோரங்களில்   கொட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, கொத்தமங்கலம், வெள்ளியம்பாளையம், கெஞ்சனூர், தாண்டாம் பாளையம், சிக்கரசம்பாளையம், புதுவடவள்ளி, பெரியகுளம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மல்லிகை, முல்லை, சம்பங்கி, செண்டு மல்லி,கோழிக்கொண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இங்கு விளையும் பூக்கள் தினசரி பறிக்கப்பட்டு சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்து  ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

 இந்நிலையில் இந்த மாதத்தில் யுகாதி பண்டிகை, தமிழ் புத்தாண்டு என  தொடர்ச்சியாக விசேஷ நாட்கள் இருந்ததால் மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் நல்ல விலைக்கு விற்பனையானது. ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவில்களில் பக்தர்கள் நுழைவதற்கு தடை உள்பட பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது.

இதன் காரணமாக பூக்களின் விலை மற்றும் விற்பனை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மலர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பூக்களை விற்பனைக்கு எடுத்துச் செல்லாமல் மூட்டை மூட்டையாக கொண்டுவந்து  சாலையின் ஓரங்களில் கொட்டுகின்ற அவல நிலை  ஏற்பட்டுள்ளது.

Top