30/Mar/2021 11:38:03
ஈரோடு, மார்ச்: ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டின் உச்சமாக ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து கொரோனா தாக்கம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.ஜூன் ஜூலை மாதங்களில் கொரோனா தாக்கம் மேலும் அதிகரித்தது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். ஒருநாள் பாதிப்பாக அதிகபட்சமாக 229 பேர் வரை பாதிக்கப்பட்டனர். இதனால் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர், மாநகராட்சி பணியாளர்கள் ஒருங்கிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தினமும் 2,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு மருத்துவமனை யாக மாற்றப்பட்டு 570 க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
இதுபோல் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை, தனியார் திருமண மண்டபங்கள், என்ஜினீயரிங் கல்லூரி, பள்ளிகளில் கொரோனா சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பயனாக தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. அடுத்து கடந்த டிசம்பர் மாதம் முதல் நமது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மீண்டும் தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பொதுமக்கள் மீண்டும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப் பிடிக்காமல் இருந்ததே ஆகும்.
முகக்கவசம், பொது இடங்களில் சமூக இடைவெளி கேள்விக்குறியானது. அதையடுத்து மாவட்ட நிர்வாகம் மீண்டும் நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியது. முக கவசம் அணியாமல் வருபவர்கள், பாதுகாப்பு வழிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியலில் இந்த ஆண்டில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 291 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் நோய் பாதிப்பில் இருந்து 25 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் குணமடைந்த வர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 955 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் நமது மாவட்டத்தில் இதுவரை 150 பேர் இறந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 186 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மீண்டும் அதிகரித்து வருவதால் சுகாதாரத் துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கிருமி நாசினி தெளிக்கும் பணி மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.