logo
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய தொழில் தொடங்க மானியக் கடனுதவி: ஆட்சியர் தகவல்

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய தொழில் தொடங்க மானியக் கடனுதவி: ஆட்சியர் தகவல்

23/Jul/2021 09:57:19

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய தொழில் துவங்க மானியக் கடன் வழங்கப்படுகிறது.

 இது  தொடர்பாக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்கவிதா ராமு வெளியிட்ட தகவல்:தமிழக அரசு சிறுதொழில் வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்  (NEEDS)  மூலம் தொழில் செய்ய மானியக் கடன் வழங்கப்படுகிறது.

முதல் தலைமுறை தொழில் முனைவோரை ஊக்குவிக்க பட்டப்படிப்பு, பட்டய படிப்பு, ஐ.டி.ஐ, படிப்பு முடித்தவர்கள் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்கிட புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம் மாவட்ட தொழில் மையத்தினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுப்பிரிவினர் 21 முதல் 35 வயது. சிறப்பு பிரிவினர் 45 வயது வரை பயன் பெறலாம். 

இத்திட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவை தொழிலுக்கு 10 லட்சம் முதல் 5 கோடி ரூபாய் வரை திட்ட மதிப்பீட்டுக்கு மானியக்கடன் விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரர் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். நிலையான முதலீடான நிலம், கட்டடம், இயந்திர தளவாடங்கள், உபகரணங்கள் ஆகியவற்றின் மதிப்பில் 25 சதவீதம் அதிகபட்சமாக 50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும்.

வங்கி கடனை திருப்பி செலுத்தும் போது, 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற  www.msmeonline.tn.gov.in/NEEDS என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட தொழில் மையத்திற்கு நேரிலோ, 04322-221794 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Top