logo
உழவர் சந்தை விவசாயிகளை பாதிக்கும்  வகையில் உழவர் சந்தைக்கு வெளியே பிற நபர்கள் வியாபாரம் செய்தால் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்

உழவர் சந்தை விவசாயிகளை பாதிக்கும் வகையில் உழவர் சந்தைக்கு வெளியே பிற நபர்கள் வியாபாரம் செய்தால் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்

19/Jul/2021 03:40:27

புதுக்கோட்டை, ஜூலை:  புதுக்கோட்டை நகராட்சி உழவர் சந்தையை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு (19.07.2021) காலை ஆய்வு செய்தார்.

பின்னர்,  ஆட்சியர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில்  பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைவித்த காய்கறிகளை இடைத்தரகர்களின்றி நேரடியாக விற்பனை செய்வதால் உரிய லாபம் கிடைத்திடவும், பசுமையான காய்கறிகளை பொதுமக்கள் வெளி சந்தையை விட குறைந்த விலைக்கு பெற்று பயனடைந்திடவும் உழவர் சந்தை பேருதவியாக அமைந்துள்ளது. அந்த வகையில்; வெற்றிகரமாக செயல்பட்டு வரும் உழவர் சந்தையினை  மேலும் விரிவுபடுத்திட  முதலமைச்சர்  நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை அறந்தாங்கி, ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, கறம்பக்குடி, விராலிமலை உள்ளிட்ட  6 இடங்களில் உழவர் சந்தைகள்  செயல்பட்டு வருகிறது.  புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள உழவர் சந்தை ஆய்வு செய்யப்பட்டு விவசாயிகளிடம் தேவைகள் குறித்து கேட்டறியப்பட்டது. 

தங்கள் விளை நிலங்களில் உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்களை கொண்டு வந்து நேரடியாக உழவர் சந்தையில் விற்பனை செய்யும் விவசாயிகளை மட்டும் உள்ளே அனுமதித்திடவும், இயற்கை விளை பொருட்களை கொண்டு வரும் விவசாயிகளை மென்மேலும் ஊக்குவித்திடவும் வேளாண்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், உழவர் சந்தையில் உள்ள விவசாயிகள் பாதிப்படையாத வகையில் உழவர் சந்தைக்கு வெளியே விவசாயிகள் அல்லாத பிற நபர்கள் வியாபாரம் செய்வது குறித்து நகராட்சி ஆணையர் மற்றும் வேளாண்துறை அலுவலர்கள்  ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இங்குள்ள விவசாயிகள் தங்கள் கிராம புறங்களிலிருந்து அதிகாலை நேரங்களில் வரும் நகர பேருந்துகளை உழவர் சந்தை வழியாக பேருந்து நிலையத்திற்கோ அல்லது உழவர் சந்தை வரை இயக்கிட வேண்டும் உள்பட சில கோரிக்கைகளை தெரிவித்துள்ளார்கள். உழவர் சந்தை விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் ஆட்சியர் கவிதாராமு.

Top