logo

கிராமசபை கூட்டத்தை நடத்த வலியுறுத்தி காந்தியிடம் மனு கொடுத்து விவசாயிகள் நூதனப் போராட்டம்

03/Oct/2020 04:59:39

ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த மயிலம்பாடி பகுதியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் காந்தி உருவப் படத்திடம் மனு கொடுக்கும்  நூதன போராட்டம் நடந்தது. ரத்து செய்யப்பட்ட கிராம சபை கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும். விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண்  மசோதா சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீட்டை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காந்தியிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் கவின் மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயமா, ஒன்றிய செயலாளர் கதிர்வேல் பஞ்சாயத்து செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

இது குறித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கவின் கூறியதாவதுதமிழகத்தில் வருடத்திற்கு நான்கு முறை கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம்,நேற்று காந்தி ஜெயந்தி அன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் கொரோனா வைரஸ் பரவலை காரணம்  காட்டி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால், உண்மையான காரணம் அதுவல்ல . மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற  விவசாயிகள், விவசாய சங்கத்தினர் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆயத்தமாகி வந்தனர்

இதைத் தடுப்பதற்காகவே தமிழக அரசு கிராம சபை கூட்டத்தை ரத்து செய்துள்ளது. இதை கண்டித்து தான் பவானி அடுத்த மயிலம்பாடி பகுதியில் விவசாயிகள் நீதி கேட்டு  காந்தி படத்துக்கு மனு கொடுக்கும் நூதன போராட்டத்தை நடத்தினர்.எனவே, அரசு இனியும் தாமதிக்காமல் கிராம சபை கூட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Top