logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்த  வாக்காளகள் 13,10,068  பேர்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்த வாக்காளகள் 13,10,068 பேர்: ஆட்சியர் தகவல்

16/Nov/2020 01:34:29

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021 -க்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி இன்று (16.11.2020) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார். 

பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2021 -க்கான வரைவு வாக்காளர்  பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,48,773 ஆண் வாக்காளர்கள்,  6,61,231 பெண் வாக்காளர்கள் மற்றும்  மூன்றாம் பாலினத்தவர்கள் 64  பேரையும் சேர்த்து மொத்தம் 13,10,068 வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 

 2020 -ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலில் (14.02.2020 -இன் படி) மொத்தம் 13,15,498 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். 14.02.2020 முதல் 31.10.2020 வரை நடைபெற்ற 2020 -ஆம் ஆண்டிற்கான தொடர் திருத்தத்தின் மூலம்  1,531 ஆண் வாக்காளர்கள், 1,590 பெண் வாக்காளர்கள் மற்றும் 1 மூன்றாம் பாலினத்தவர் சேர்த்து மொத்தம் 3,122 வாக்காளர்கள்; புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

 14.02.2020 முதல் 31.10.2020 வரை நடைபெற்ற 2020-ஆம் ஆண்டிற்கான தொடர் திருத்தத்தின் மூலம் 4,440 ஆண் வாக்காளர்கள், 4,090 பெண் வாக்காளர்கள் மற்றும் 22  மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 8,552 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,547 வாக்குசாவடி மையங்கள் உள்ளன. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில்  நகர எல்கைக்குள் 85 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்கைக்குள் 843 வாக்குச்சாவடி அமைவிடங்கள் என மொத்தம் 928 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன.

 மேலும், சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2021 -இன் தொடர்ச்சியாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான மனுக்கள் பெற 16.11.2020 முதல் 15.12.2020 வரை கால அவகாசம்  வழங்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களின் வசதிக்கேற்ப 21.11.2020 (சனிக்கிழமை), 22.11.2020 (ஞாயிற்றுக் கிழமை), 12.12.2020 (சனிக்கிழமை) மற்றும்   13.12.2020 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 4 தினங்கள் சிறப்பு முகாம் 928 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங் களில் நடைபெறும். 2021-ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் எதிர்வரும் 20.1.2021 (புதன்கிழமை) அன்று வெளியிடப்பட உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், அறந்தாங்கி வருவாய் கோட்ட உதவி ஆட்சியர் ஆனந்த் மோகன், வருவாய் கோட்டாட்சியர்கள் தண்டாயுதபாணி, டெய்சிக்குமார், வட்டாட்சியர் (தேர்தல்) சங்கர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Top