logo
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முறைகேடு: திருப்பூர் அருகே அனைத்து கட்சியினர் சாலை மறியல்

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முறைகேடு: திருப்பூர் அருகே அனைத்து கட்சியினர் சாலை மறியல்

01/Jul/2021 01:38:21

 

திருப்பூரை அடுத்த மங்கலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முறைகேடு நடைபெற்று வருவதாகக்கூறி அனைத்துக் கட்சியினர் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் அடுத்துள்ள மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அப்பகுதி பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியர் ஒருவர் தனக்குத் தெரிந்தவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்துவதற்கான டோக்கன் விநியோகம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், அதிக மக்கள் வசிக்கும் மங்கலம் ஊராட்சிக்கு குறைந்த அளவு தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளதால் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் பொதுமக்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இதுதொடர்பான புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து அனைத்து கட்சியினர் சாலை மறியலில் ஈடுபடத் திட்டமிட்டுருந்தனர்.

இதன் பேரில் மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக அனைத்துக் கட்சியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த பல்லடம் டிஎஸ்பி- வெற்றி செல்வன், மங்கலம் காவல் ஆய்வாளர் நீலாதேவி  ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், தடுப்பூசி செலுத்துவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் செவிலியர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Top