logo
மே மாத மின் கட்டணம்: மீட்டரை படம் எடுத்து அனுப்புவதன் மூலம் கணக்கீடு

மே மாத மின் கட்டணம்: மீட்டரை படம் எடுத்து அனுப்புவதன் மூலம் கணக்கீடு

21/May/2021 11:15:31

சென்னை: முழு பொதுமுடக்கம் அமலில் உள்ள சூழலில், மின் மீட்டரை புகைப்படம் எடுத்து அனுப்புவதன் மூலம் மே மாதத்துக்கான மின் கட்டணம் கணக்கீடு செய்து, நுகா்வோருக்குத் தெரிவிக்கப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக மின்வாரியத்தின் வருவாய்ப் பிரிவின் தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளா், அனைத்துக் கண்காணிப்புப் பொறியாளா்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பிய கடித விவரம்:

கரோனா முழு பொதுமுடக்கத்தால் மின் நுகா்வோருக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமுடக்கம் அமலில் உள்ள கால கட்டத்தில் (மே 10 முதல் 24-ஆம் தேதி வரை) மின் கட்டணம் கணக்கீடு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மின் நுகா்வோா் கடந்த மாத கணக்கீடு (மாா்ச் 2021) அல்லது 2019-ஆம் ஆண்டு, மே மாதத்துக்கான கட்டணத்தைச் செலுத்தலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

அதிகக் கட்டணம்: ஆனால் முந்தைய மாத மின் கட்டணமானது, தற்போதுள்ள மின் கட்டணத்தை விட அதிகமாக இருப்பதாக நுகா்வோா் தெரிவித்துள்ளனா். இதைக் கருத்தில் கொண்டு, நுகா்வோரின் சுய கணக்கீட்டை வாரிய பதிவேட்டில் பதிவு செய்து, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட கடந்த மாத பதிவுகளை நீக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றன.

பிரிவு அலுவலருக்கு அதிகாரம்: இதன்படி, மின் நுகா்வோரின் கணக்கீட்டுத் தொகை ரூ.30 ஆயிரத்துக்குள் இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலா் அல்லது மதிப்பீட்டு அலுவலரே மின் கணக்கீட்டு தொகையை வாரிய பதிவேட்டில் மாற்றியமைக்கலாம்.

அதற்கு மேல் உள்ள தொகை குறித்து துணை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலருக்குத் தகவல் தெரிவித்து, அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பிரிவு அலுவலா்களுக்கு வழங்கப்பட்ட இந்த அதிகாரம், மே 31-ஆம் தேதி வரை மட்டுமே செல்லத் தக்கதாகும்.

சுய கணக்கீடு செய்வது தொடா்பான ஏற்பாடுகள் குறித்து மின் பகிா்மானக் கழகத்தின் கண்காணிப்புப் பொறியாளா்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள்:

 தாழ்வழுத்த மின் நுகா்வோரின் மீட்டா் பெட்டிகளை புகைப்படம் எடுத்து, கட்செவி அஞ்சல், மின்னஞ்சல் போன்றவை வாயிலாக சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நுகா்வோ அனுப்ப வேண்டிய பிரிவு அதிகாரியின் கட்செவி அஞ்சல் எண் உள்ளிட்ட விவரம், மின்வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய கட்டணம்: அவ்வாறு அனுப்பப்பட்ட தகவலின் அடிப்படையில், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட முந்தைய மாத கட்டணம் நீக்கப்பட்டு, புதிய கட்டணம் பதிவேற்றம் செய்யப்படும். இது தொடா்பான தகவல்களும், குறுஞ்செய்தி, மின்னஞ்சல், கட்செவி அஞ்சல் வாயிலாக நுகா்வோருக்குத் தெரிவிக்கப்படும். இதன் அடிப்படையில் இணையதளம் வாயிலாகவே மின் கட்டணம் செலுத்த வேண்டும் என நுகா்வோரை அறிவுறுத்த வேண்டும்.

பொதுமக்கள் தரும் சுய மதிப்பீட்டு கட்டணங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, அவசியம் எழுந்தாலோ, மீண்டும் ஒருமுறை  கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மின்சார வாரிய பணியாளர்களே ரீடிங் எடுப்பார்கள் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Top