logo
மோட்டார் வாகனங்களில் புல்பார், கிராஷ் கார்டு(பம்பர்) பொருத்தத் தடை: ஆட்சியர் தகவல் .

மோட்டார் வாகனங்களில் புல்பார், கிராஷ் கார்டு(பம்பர்) பொருத்தத் தடை: ஆட்சியர் தகவல் .

03/Jan/2021 11:06:24

புதுக்கோட்டை:  மோட்டார் வாகனங்களில் புல்பார், கிராஷ் கார்டு பொருத்தத் தடை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து,  மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: மத்திய அரசின் அறிவிப்பின்படி மோட்டார் வாகனங்களின் புல்பார், கிராஷ் கார்டு  பொருத்திக் கொள்வது வாகனத்தின் பயணிப்பவருக்கும், பிறசாலைப் பயனீட்டாளர்களுக்கும் பாதுகாப்பு அம்சங்களில் கடுமையான பாதிப்பு ஏற்படுத்துகிறது என்பதால்,அவ்வாறு புல்பார் கிராஷ் கார்டு பொருத்துவதை தடைசெய்து உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், சென்னை உயர்நீதிமன்றமும்  வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கிராஷ் கார்டு அகற்றப்படாமல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

புல்பார், கிராஷ் கார்டு பொருத்துவது வாகன அளவுகளில்  மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. இது மோட்டார்  வாகனச் சட்டப்பிரிவு 52-ன் படி தடை செய்யப்பட்ட ஒன்றாகும். crumble zone என அழைக்கப்படும் மோதலில் நசுங்கக் கூடிய பகுதிகளான பம்பர், கிரில், ரேடியட்டர், பானட் போன்ற பகுதிகளில் கிடைக்கக் கூடிய அழுத்தங்கள் பயணிகள் அமர்ந்திருக்கும் பகுதிக்கு செல்லும் வாய்ப்பு அதிகரிக்கும்.

பயணிகளின் முக்கிய பாதுகாப்பு சாதனமான காற்றுப்பை திறந்து கொள்வதற்கான சென்சார்களின் இயக்கம் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகரிக்கும். வாகன நீள, அகல அளவுகள் தயாரிப்பாளரின் அளவைவிட அதிகரிப்பதால் சைக்கிள், பாதசாரிகள் போன்ற பிற சாலை பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பிற்கு இடையூறு ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

வாகனமோதல் நிகழும் பொழுது எதிர் வாகனங்களின் சேசிஸ் போன்ற பகுதிகளில் கடும் சேதம் ஏற்படுத்துவதால், அவ்வாகனங்களில் பயணம் செய்யும் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதோடு, காற்றுப்பைகள் விரிவடையாமல் தடுக்கப்படுவதால் புல்பார், கிராஷ் கார்டு ஆகியவை பொருத்தப்படுவதால் வாகனத்தில் பயணிப்பவர்களுக்கும் உயிர் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.

எனவே வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தில் புல்பார், கிராஷ் கார்டு பொருத்தி இருந்தால் அவற்றை உடனடியாக அகற்றி விபத்தில்லா போக்குவரத்தினை உருவாக்கிடவும், விபத்து நிகழ்கையில் உயரிழப்பினை தடுத்திடவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அகற்றபடாத புல்பார், கிராஷ் கார்டு ஆகியவை போக்குவரத்துத்துறை, காவல்துறையின ரால் அகற்றப்படுவதோடு மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 190 மற்றும் 191-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

Top