logo
தமிழகத்தின் மாபெரும் ஈரோடு ஜவுளி சந்தை மூடப்பட்டது:  ரூ .10 கோடி  வர்த்தகம் பாதிப்பு.. 10 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முடங்கும் அபாயம்

தமிழகத்தின் மாபெரும் ஈரோடு ஜவுளி சந்தை மூடப்பட்டது: ரூ .10 கோடி வர்த்தகம் பாதிப்பு.. 10 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முடங்கும் அபாயம்

08/May/2021 10:24:43

ஈரோடு, மே: தமிழகத்தின் மாபெரும் ஜவுளிச்சந்தையான ஈரோடு கனி ஜவுளி சந்தை மூடப்பட்டதால் சுமார்  ரூ .10 கோடிக்கு  வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன்  10 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாநகர் பகுதியில் தமிழகத்தின் புகழ்பெற்ற கனி மார்க்கெட் ஜவுளி சந்தை செயல்பட்டு வந்தது. இங்கு தினசரி சந்தை கடைகள் 254, வாரசந்தை கடைகள் 700 கடைகள் சென்ட்ரல் மார்க்கெட், அசோகபுரம் மார்க்கெட், கருங்கல்பாளையம் ஆஞ்சநேயர் மார்க்கெட் என மொத்தம் 3 ஆயிரம் கடைகள் உள்ளன. இங்கு ஒவ்வொரு  காலநிலைக்கு ஏற்ப துணிகள் விற்கப்படுவது தனி சிறப்பாகும்.

தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் இங்கு வந்து துணிகளைக் கொள்முதல் செய்வார்கள். இதுபோல் கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா ,தெலங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து துணிகளைக் கொள்முதல் செய்வார்கள். செவ்வாய் தோறும் நடைபெறும் ஜவுளி சந்தை உலகப்புகழ் பெற்றதாகும்.

 இங்கு துணிகள் மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதால் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காட்சி அளிக்கும். இந்நிலையில் கடந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக ஜவுளித் தொழிலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் இயல்பு நிலை திரும்ப திரும்ப ஓரளவு தொழில் சூடு பிடிக்கத் தொடங்கியது.

இந்நிலையில் கடந்த மாதம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் மீண்டும் வியாபாரம் பாதிக்கப்பட்டது. வெளிமாநில வியாபாரிகள் வருகை இல்லாததால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதுஇந்நிலையில் கொரோனா 2 - ஆவது அலை வேகம் எடுக்கத் தொடங்கிய உடன் அனைத்து வாரச்சந்தை கடைகளும் அடைக்கப்பட்டி ருந்தன.

தினசரி சந்தை மட்டும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் கனி மார்க்கெட் ஜவுளி சந்தையில் வரும் 20-ஆம் தேதி வரை அடைக்க முடிவு செய்யப்பட்டு தற்போது அடைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

இதுகுறித்து கனி மார்க்கெட் வாரச் சந்தை தலைவர் செல்வராஜ் கூறியதாவது: ஜவுளி தொழில் ஏற்கெனவே கொரோனா தாக்கம் காரணமாக நலிவடைந்து வருகிறது. தற்போது இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பா டுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் வெளிமாநில வியாபாரிகள் வர  - பாஸ் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள் ளன. இதனால் வெளிமாநில வியாபாரிகள் வருவதில்லை. இதன் மூலம் மொத்த வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.  சில்லறை வியாபாரம் மட்டும் ஒரு அளவுக்கு நடந்து வந்தது.


தற்போது புதிய கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளதால் நாங்கள் வரும் 20-ஆம் தேதி வரை தினசரி கடையை மூட முடிவு செய்து அதன்படி தற்போது கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு நாளைக்கு 80 லட்சம் வீதம் 15 நாளில் கிட்டத்தட்ட ரூ. 10 கோடிக்கு மேல் வர்த்தகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த தொழிலை நம்பியுள்ள 10 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அரசு சில தளர்வுகள் அறிவித்து காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கடைகள் செயல்பட அனுமதி அளித்தால் ஓரளவு தொழிலை நடத்தி வாழ்வாதாரத்தை காத்துக்கொள்ள முடியும் என்றார் அவர்.

Top