logo
வானிலை முன்னறிவிப்பை அறிந்து கொள்ள மேக்தூத் செயலி  விவசாயிகளுக்கு மிகவும் பயனளிக்கும்

வானிலை முன்னறிவிப்பை அறிந்து கொள்ள மேக்தூத் செயலி விவசாயிகளுக்கு மிகவும் பயனளிக்கும்

13/Apr/2021 09:07:24

புதுக்கோட்டை, ஏப்: வானிலை முன்னறிவிப்பை அறிந்து கொள்ள மேக்தூத் செயலி  விவசாயிகளுக்கு மிகவும் பயனளிக்கும் என்றார் திண்டுக்கல் அருகேயுள்ள கன்னிவாடி எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன  திட்ட அலுவலர் என்.தேவராஜ் .

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள மறமடக்கி ஊராட்சியில் எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய வானிலை ஆய்வுத்துறை இணைந்து நடத்திய விவசாயிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் வானிலை ஆய்வறிக்கை பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. 

கருத்தரங்கிற்கு மறமடக்கி ஊராட்சி மன்ற தலைவர் இராஜமனோஹரிரவி தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.அன்பரசு முன்னிலை வகித்தார். எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் கருத்தரங்கை  தொடங்கி வைத்து பேசுகையில், அறிவியல் தகவல் தொழில் நுட்ப உதவியுடன் விவசாயிகளுக்கு பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட தகவல்களை எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கி வருகின்றது. வானிலை அறிக்கை பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டு அதை எவ்வாறு விவசாயத்தில் பயன்படுத்தலாம் என அறிந்துகொள்ள  இந்த கருத்தரங்கம்   மிகவும் உதவியாக இருக்கும் என குறிப்பிட்டார்.

 நிகழ்ச்சியில் திண்டுக்கல் அருகே கன்னிவாடியிலுள்ள எம். எஸ். சுவாமிநாதன்  ஆராய்ச்சி நிறுவன  திட்ட அலுவலர் என்.தேவராஜ்  பங்கேற்று  பேசுகையில், மாறிவரும் தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக விவசாயத்தில் ஏற்படும் இழப்புகளை தவிர்த்து வானிலைக்கு ஏற்றவாறு  விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை திட்டமிடவும், கூடுதல் மகசூல் பெறும் வகையில் செயல்படவும் கிராமிய வேளாண் வானிலை சேவை ஜி.கே. எம். திட்டத்தின்கீழ்  இந்த விழிப்புணர்வு கருத்தங்கம் நடத்தப்படுகிறது. 

வானிலை முன்னறிவிப்பு மற்றும் வானிலை சார்ந்த அறிவுரைகளை விவசாயிகள் அவ்வப்போது அறிந்து கொள்ளும் வகையில் இந்திய வானிலை ஆய்வுத்துறை மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் இணைந்து மேக்தூத் என்னும் கைபேசி செயலியை உருவாக்கியுள்ளது.

இந்த செயலி மூலம் கடந்த கால வானிலை தகவல்கள் மற்றும் அடுத்த 5 நாட்களுக்கு எதிர்பார்க்கப்படும் மழையளவு, அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை, மேகமூட்டம், காற்றின் வேகம், காற்றின் திசை, காற்றின் ஈரப் பதம் போன்ற வானிலை காரணிகள் குறித்த வானிலை முன்னறிவிப்பும், அத்தகைய வானிலைக்கேற்ற வேளாண் ஆலோசனைகள் மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்த பரிந்துரைகளும் வழங்கப்படுகிறது.

 

இத்தகவல்கள் வாரத்திற்கு  2 முறை அதாவது ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழ மைகளில் புதுப்பிக்கப்படுகிறது. தற்போது மாவட்ட வாரியாக மண்டல மொழிகளில் வழங்கப்படும் இத்தகவல்கள் விரைவில் வட்டார அளவில் வழங்கவும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

இயற்கை விவசாயத்தின் மூலம்தான்  இரசாயன உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகளின் பயன்பாட்டைக் குறைக்கமுடியும் என்றார் என். தேவராஜ். எம். எஸ். சாமிநாதன் ஆராய்சி நிறுவன கள ஒருங்கிணைபாளர் டி.விமலா  வரவேற்றார், விவசாயி கே.பதி  நன்றி கூறினார்.

Top