19/Dec/2020 06:13:27
சென்னை தாம்பரம் அடுத்த கொடுங்குன்றம் தேவநேசன் நகரைச் சேர்ந்தவர் சங்கர்(28). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது பள்ளிப் பருவ நண்பர் கொரோனா நோயால் அண்மையில் உயிரிழந்தார்.
திருச்சியில் நடைபெற்ற நண்பரின் துக்க நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு சங்கர் வியாழக்கிழமை வீடு திரும்பினார். ஊருக்குச் சென்று திரும்பியது முதல் சங்கர் மன உளைச்சலோடு இருந்தாராம். இந்நிலையில் சங்கர் வீட்டில் உள்ள தனது அறையில் வியாழக் கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சங்கரின் உடலைக் கைப்பற்றிய பிரேதப் பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பீர்க்கன்காரணை போலீசார் சங்கர் நண்பர் கொரோனாவால் இறந்ததால்தான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.