logo
குறுவை பருவத்திற்கு தேவையான உரங்கள்  தடையின்றி கிடைக்கும்: வேளாண்துறை தகவல்

குறுவை பருவத்திற்கு தேவையான உரங்கள் தடையின்றி கிடைக்கும்: வேளாண்துறை தகவல்

31/Mar/2021 11:26:35

புதுக்கோட்டை, மார்ச்: குறுவை பருவத்திற்கு தேவையான உரங்கள்  விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்கும் வகையில் போதிய  அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து, புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார் வெளியிட்ட தகவல்:  புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுவை பருவத்திற்கு தேவையான உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது கண்மாய், கிணறு, ஆழ்துளைக் கிணறு ஆகியவற்றிலுள்ள நீர் இருப்பினைப் பயன்படுத்தி விவசாயிகள் குறுவை நெல் சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். கோடையில் நடவு செய்யப்பட்ட நெற்பயிரும் தற்போது மேலுரம் இடும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் குறுவை பருவத்திற்குத் தேவையான உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  

 தற்போது மாவட்டத்தில் 3,797 மெட்ரிக் டன் யூரியா, 803 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 1,756 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 3,021 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தனியார்  மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உர விற்பனையாளர்களின் கவனத்திற்கு விற்பனை உரிமம் இன்றி உரம் விற்பனை செய்தால் உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின்( 1985) படி நடவடிக்கை மேற்கொள் ளப்படும்

 மானிய விலையில் உள்ள உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் மட்டும் விற்பனை செய்ய வேண்டும், உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை விவசாயிகள் அறியும் வண்ணம் பராமரிக்க வேண்டும், உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும், பணப் பரிமாற்றத்திற்கான QR Code  விவசாயிகளின் பார்வையில் படும்படி வைக்க வேண்டும், விவசாயிகள் உரம் வாங்கும்போது உரிய ரசீது வழங்க வேண்டும், உர வரவு மற்றும் இருப்பு விவரங்கள் சரியாக பராமரிக்காமல் இருந்தால் உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 


  மேலும் விவசாயிகள் கவனத்திற்கு மண்வள அட்டையில் பரிந்துரைக்கப்பட்டவாறு உரங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும்.  இதனால் உரச் செலவைக் குறைக்கலாம், உரங்கள் விற்பனை முனையக் கருவி மூலம் விற்பனை செய்வதால் கட்டாயம் ஆதார் கார்டு கொண்டு செல்ல வேண்டும், உரம் வாங்கும் போது இரசீது தவறாமல் கேட்டு பெறவேண்டும், மேலும் உரம் வாங்க செல்லும் பொழுது அரசு அறிவித்துள்ள படி விவசாயிகள் சமூக இடைவெளி விட்டு சுயபாதுகாப்பு முறைகளான முககவசம் அணிதல், அடிக்கடி கைகழுவுதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். 

மேலும் உரம் குறித்த புகார்களுக்கு தங்கள் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள உர ஆய்வாளரை தொடர்பு கொள்ளலாம் அல்லது வேளாண்  இணை இயக்குநர் அலுவலக தொலைபேசி எண். 04322 - 221666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறுவை பருவத்திற்கு தேவையான உரங்களை வாங்கி பயன்படுத்தி நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெற்று பயன்பெறலாம்


Top