logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும்: சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும்: சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்

28/May/2021 08:55:58

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்டத்தில் பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க  அனைத்துத்துறை அலுவலர்களும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றார் தமிழக சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில்  (28.05.2021) மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி முன்னிலையில்  ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பேசியதாவது  கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை  அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தொற்றை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து  ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் சிகிச்சைகளின் விவரம், மருத்துவ முகாம்கள், கோவிட் தடுப்பூசி முகாம்கள், ஆர்டி-பிசிஆர் பரிசோதனை, கோவிட் கவனிப்பு மையங்கள், படுக்கை வசதி, ஆக்ஸிஜன் இருப்பு போன்ற பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு அத்திவாசிய பொருட்களை கிடைக்க செய்தல், 108 ஆம்புலன்ஸ் வசதி, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு பணிகள், தூய்மை பணிகள், ஊரடங்கை கடைபிடித்தல் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊராட்சி அளவில் குழுக்கள் அமைத்து கோவிட் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து அந்த பகுதிகளிலேயே சிகிச்சை அளிக்கவும், ஆர்டிபிசிஆர் பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், பொதுமக்களுக்கு அதிக அளவு தடுப்பூசி  போடுவதை உறுதி செய்யவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவிட் அதிகம் பாதித்த பகுதிகளில் நோய் தொற்றை குறைக்கும் வகையில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்கோவிட் நோயாளிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்தி கோவிட் நோயால் எவ்வித இறப்பும் இல்லாத நிலையை உருவாக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் மெய்யநாதன்.

 இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

Top