logo
2011 சட்டமன்றத்தேர்தல் ஆலங்குடி தொகுதி கண்ணோட்டம்.

2011 சட்டமன்றத்தேர்தல் ஆலங்குடி தொகுதி கண்ணோட்டம்.

27/Mar/2021 05:56:49

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள  ஆலங்குடி 2 -ஆவது குருஸ்தலம் என போற்றப்படுகிறது. ஆலங்குடி தொகுதியில் உள்ள குளமங்கலத்தில் உள்ள பெருங்கரையடி மிண்ட அய்யனார் கோவில் முன்பு, ஆசியாவிலேயே மிக உயரமான குதிரை உள்ளது. இதனால் குதிரை கோவில் என்று இக்கோவிலின் பெயர் விளங்குகிறது.   கீரமங்கலத்தில்  தமிழகத்தில் அதிக உயரத்தில்  சிவன் சிலையும், தலைமைப் புலவரான நக்கீரருக்கு முழு உருவ சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. கடலைக்கு மாநில அளவில் ஆலங்குடி புகழ்பெற்று விளங்குகிறது.

சம அளவில் தி.மு.க - அ.தி.மு.க.

இத்தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் தி.மு.க. 4 முறையும், அ.தி.மு.க. 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் வெங்கடாசலம் இத்தொகுதியில் இருந்து 3 முறை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தொகுதியில் முத்தரையர் இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அடுத்ததாக முக்குலத்தோர், உடையார், செட்டியார் இன மக்கள் வசித்து வருகின்றனர். கணிசமாக எண்ணிக்கையில் மற்ற இன மக்களும் வசித்து வருகிறார்கள்.

கிராமப்பகுதிகள் அதிகம்

இத்தொகுதியில் திருவரங்குளம் ஒன்றியத்தில் 48 ஊராட்சிகளும்,  ஆலங்குடி, கீரமங்கலம் ஆகிய 2 பேரூராட்சிகளும், அறந்தாங்கி தாலுகாவில் உள்ள அரசர்குளம் வருவாய்சரகம், பூவற்றக்குடி வருவாய்ச்சரகம், சிலட்டூர் வருவாய்ச்சரகங்களில் இருந்து 32 ஊராட்சிகளும் இணைந்துள்ளன.

இதில் அரசர்குளம் வருவாய்ச்சரகமும், பூவற்றக்குடி வருவாய்ச்சரகமும் தொகுதி மறுசீர மைப்பிற்கு பிறகு புதிதாக இணைக்கப்பட்டதாகும். இதில் ஆலங்குடி பேரூராட்சியும், கீரமங்கலம் பேரூராட்சியும் உள்ளன. இத்தொகுதியில் பெரும்பான்மையானது கிராமப்பகுதிகளே ஆகும்.

கோரிக்கைகள்:

ஆலங்குடியில் முன்பு தமிழகத்திலேயே அதிக கடலை மில் மற்றும் எண்ணை மில்கள் நிறைந்ததாக இருந்தது. தற்போது கடலை மில்கள், திருமண மண்டபங்களாக மாறி வருகின்றன. ஆனால் ஆலங்குடி தொகுதி பகுதிகளில் வேர்க்கடலை அதிகமாக விளைகிறது. அவ்வாறு விளையும் வேர்க்கடலை, விற்பனைக்காக சென்னை மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. 

ஆலங்குடியில் ஒரு வனஸ்பதி ஆலை உருவாக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இதேபோல் ஆலங்குடி தொகுதியில் ரோஜா, மல்லிகை, சம்பங்கி, கரட்டான், மரிக்கொழுந்து போன்ற பூ வகைகள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. 

வாசனை திரவிய தொழிற்சாலை

இப்பூக்களை மாலை மற்றும் சரங்களாக தொடுத்து விற்பதில், பூ உற்பத்தியாளர்களுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை. எனவே இந்த தொகுதியில் உள்ள கீரமங்கலத்தில் ஒரு வாசனை திரவிய தொழிற்சாலை (செண்ட் பேக்டரி) அமைக்க வேண்டும் என்பது பூ உற்பத்தியாளர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. 

இதே போல் ஆலங்குடி தொகுதியில் தென்னை மரங்கள் ஏராளமாக உள்ளன. எனவே கீரமங்கலத்தில் தென்னை கொப்பரை கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் .கீரமங்கலம், செரியலூர், கொத்தமங்கலம், குளமங்கலம், அணவயல் ஆகிய பகுதிகளில் சீசன் நேரங்களில் முருங்கைக்காய் விளைச்சல் அதிகமாக  இருக்கும்.

அப்போது 100 காய் கொண்ட ஒரு கட்டுரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை விலை கிடைக்கும். இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. எனவே ஆலங்குடி அல்லது கீரமங்கலம் பகுதியில் முருங்கைக்காய் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நிறுவ வேண்டும் என்பதும் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது.   இப்பகுதி பலாப்பழம் வெளி மாநில மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

  கல்விக்கு விழிப்புணர்வு கொண்ட இத்தொகுதியில் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளில் ஆண்டுக்கு 3 முதல் 4 பேர் வரை மருத்துவக்கல்லூரியில்  சேருகின்றனர் என்பது மாவட்டத்துக்கு   பெருமை சேர்க்கும் நிகழ்வாகும் .

ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல் நிலவரம் வருமாறு:

1962- ம் ஆண்டு

முருகையன் (தி.மு.க.)                          31,438 (வெற்றி)

மங்கப்பன் (காங்)                                  18,472   

1967-ம் ஆண்டு

கே.வி.சுப்பையா (தி.மு.க.)                    32,984 (வெற்றி)

டி.ஏ.எஸ்.தங்கவேல் (காங்)                   32,148 

1971-ம் ஆண்டு

கே.வி.சுப்பையா (தி.மு.க.)                    43,279 (வெற்றி)

டி.ஏ.எஸ்.தங்கவேல் (காங் ஓ)               35,397

1977-ம் ஆண்டு    

டி.புஷ்பராஜ் (காங்)                                37,634 (வெற்றி)

பி.திருமாறன்     (அ.தி.மு.க.)                 27,059.

1980-ம் ஆண்டு

பி.திருமாறன் (அ.தி.மு.க.)                       56,206 (வெற்றி)

டி.புஷ்பராஜ் (காங்)                                    44,605

1984-ம் ஆண்டு

ஏ.வெங்கடாசலம் (அ.தி.மு.க.)               74,202 (வெற்றி)

ஏ.பெரியண்ணன் (தி.மு.க.)                    37,173

1989-ம் ஆண்டு

கே.சந்திரசேகரன் (தி.மு.க.)                   37,361 (வெற்றி)

டி.புஷ்பராஜ் (காங்)                                  33,141

1991-ம் ஆண்டு

எஸ்.சண்முகநாதன் (அ.தி.மு.க.)             88,684 (வெற்றி)

எஸ்.சிற்றரசு (தி.மு.க.)                              38,983..

1996-ம் ஆண்டு

ஏ.வெங்கடாசலம் (சுயேச்சை)                   35,345 (வெற்றி).

எஸ்.ராஜசேகரன் (கம்யூ) திமுக கூட்டணி     34,693.

2001-ம் ஆண்டு

ஏ.வெங்கடாசலம் (அ.தி.மு.க.)                59,631 (வெற்றி).

எஸ்.ஏ.சூசைராஜ் (தி.மு.க.)                       42,900.

2006-ஆம் ஆண்டு

எஸ்.ராஜசேகரன் (இ.கம்யூ)                   60,122 (வெற்றி).

ஏ.வெங்கடாசலம் (.அ.தி.மு.க.)               50,971.

2011-ஆம் ஆண்டு

கு.ப. கிருஷ்ணன்  (அதிமுக)   57,250  ( வெற்றி)

சுப அருள்மணி (பாமக) 52,123

2016-ஆம் ஆண்டு

சிவ.வீ. மெய்யநாதன்-(திமுக) வெற்றி.

இந்த தொகுதியில் 1962-ஆம் ஆண்டு முதல் இதுவரை 12 சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. இந்த தேர்தல்களில் தி.மு.க. 4 முறையும், அ.தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும், சி.பி.ஐ. ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை வேட்பாளர் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தொகுதியில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.ஆண்வாக்காளர்கள்- 1,07,129 . பெண் வாக்காளர்கள் -1,10,147, இதரர்  4 பேர் உள்பட மொத்தம் 2,17, 280 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் கள நிலவரம்: திமுக சார்பில் 2016 தேர்தலில் வென்ற சிவ.வீ. மெய்யநாதன் தற்போது மீண்டும் அக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் தர்மதங்கவேல் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார்.  காங்கிரஸ் கட்சியிலிருந்து அண்மையில் இணைந்த இவருக்கு வாய்ப்பு அளித்ததால் கட்சித்தலைமை மீது அதிருப்தியடைந்த  நிர்வாகிகள்   இவரை  மாற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும், இவருக்கு வாய்ப்பு வாங்கித்தந்ததாகக் கூறப்படும்  சுகாதாரத்துறை அமைச்சருக்கும் அழுத்தம் கொடுத்தனர்.

ஆனால், எந்த மாற்றமும் நடக்கவில்லை. எனவே, அதிமுகவினர் அமைதியாக தேர்தல் பணிகளில்   தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர் . இருவருமே முத்தரையர் என்பதால் போட்டி கடுமையாகவே  இருக்கிறது.  இது தவிர  அமமுக சார்பில் டி. விடங்கர்,  மக்கள் நீதிமய்யம் சார்பில்  நா. வைரவன், நாம் தமிழர் கட்சி சார்பில் சி. திருச்செல்வம் மற்றும் இதர கட்சிகள், சுயேச்சைகள் 6 பேர் உள்பட மொத்தம் 11 பேர் களத்தில் உள்ளனர்.

இந்தத்தொகுதியைப் பொருத்தவரை அதிமுக- திமுக இடையே நேரடிப்போட்டி நிலவுகிறது. என்றாலும் தேர்தல் களம் பரபரப்பின்றியே காணப்படுகிறது.

 

Top