logo
மீண்டும் அசத்தினார் நடிகர்  விஜய் : ரூ. 240 கோடி வசூலித்துள்ள மாஸ்டர் படம்..!

மீண்டும் அசத்தினார் நடிகர் விஜய் : ரூ. 240 கோடி வசூலித்துள்ள மாஸ்டர் படம்..!

09/Feb/2021 11:32:38

விஜய் நடித்த மாஸ்டர் படம் உலகளவில் ரூ. 240 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். அனிருத் இசையில், நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் 8 மாதங்களாக மூடப்பட்டிருந்தன. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் திரையரங்குகளில் அண்மையில்  வெளியானது. பிறகு, மாஸ்டர் படம் ஜனவரி 29-இல் அன்று அமேசான் பிரைம் ஓடிடி- தளத்திலும்ல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் படம் வெளியான மூன்று வாரங்களுக்குப் பிறகு மாஸ்டர் படத்தின் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட 140 கோடி செலவில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ரூ. 80 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக முன்பே செய்திகள் வெளியாகின.

 டிஜிட்டல் உரிமையில் அமேசான் பிரைம் மூலமாக ரூ. 36 கோடி கிடைத்துள்ளது. தற்போதைய நிலவரத்தின்படி, இந்திய அளவில் ரூ. 200 கோடி, வெளிநாடுகளில் ரூ. 40 கோடி என மாஸ்டர் படத்துக்கு உலகளவில் ஏறத்தாழ  ரூ. 240 கோடி வசூல் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஓடிடி-யில் படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் இன்னும் பல திரையரங்குகளில் மாஸ்டர் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. திரையரங்கு உரிமையாளர்கள் பலரும் மாஸ்டர் படத்துக்குக் கிடைக்கும் தொடர்ச்சியான வரவேற்பு குறித்து ட்வீட் செய்து வருகிறார்கள். இதனால் ஓடிடி-யில் வெளியானாலும் திரையரங்கிலும் ஒரு படம் தொடர்ந்து நல்ல வசூலைப் பெற முடியும் என்பதற்கு மாஸ்டர் படம் ஓர் உதாரணமாக இருந்து வருகிறது. 

தெறி, மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர் என சமீபத்திய விஜய் படம் ஒவ்வொன்றும் முந்தைய படங்களின் வசூல்களைத் தாண்டியுள்ளன. கொரோனா அச்சுறுத்தல், இந்தியாவில் 50% ரசிகர்கள் அனுமதி, இன்னமும் சில வெளிநாடுகளில் நிலவும் கொரோனா ஊரடங்குக் கட்டுப்பாடுகள் போன்ற பல தடைகள் இருந்தும் எதிர்பார்ப்பை விடவும் அதிகமாக வசூலித்து சாதித்துள்ளது மாஸ்டர் படம். எனினும் சில வெளிநாடுகளில் இன்னும் கொரோனா கட்டுப்பாடுகள் நீடிப்பதால் பிகிலின் வெளிநாட்டு வசூலை மாஸ்டர் படத்தால் தாண்ட முடியவில்லை.

 மலேசியாவில் ஊரடங்கு இன்னும் அமலில் உள்ளதால் அங்கு வழக்கமாகக் கிடைக்கும் பெரிய வசூல் இந்தமுறை கிடைக்கவில்லை. மாஸ்டர் படத்தின் அதிகாரபூர்வ வசூல் விவரங்களை விரைவில் வெளியிடவுள்ளதாக ஒரு பேட்டியில் படத்தின் பேட்டியில் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ கூறியுள்ளார். இதனால் மாஸ்டர் படத்தின் வசூல் குறித்த அதிகாரபூர்வ தகவல் திரையரங்குகளில் அடுத்து வெளியாகவிருக்கும் மற்ற படங்களுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Top