logo
உலக சுற்றுச்சூழல் தினம்... புதுக்கோட்டை போராங்குளத்தின் சோகக்கதை...?

உலக சுற்றுச்சூழல் தினம்... புதுக்கோட்டை போராங்குளத்தின் சோகக்கதை...?

05/Jun/2021 08:40:20

 

புதுக்கோட்டை, ஜூன் உலக சுற்றுச்சூழல் தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மரக்கன்று நடவு, சுற்றுப் புறச்சூழல், நீர்நிலைகள் போன்றவற்றை சுகாதாரமுறையில் பாதுகாப்பது போன்ற விழிப்புணர்வு பணிகள் மேற்கொள் ளப்படும். உலகச்சுற்றுச்சூழல் தினத்தை மேற்கூறிய நல்ல நிகழ்வுகள் நினைவூட்டப்படும்  வேளையில்   புதுக்கோட்டை நகராட்சியிலுள்ள போராங்குளத்தின் சோகக்கதையும் நிழலாடுவதை தவிர்க்க முடியவில்லை.

புதுக்கோட்டை ஆலங்குடி சாலையோரம் பேருந்து நிறுத்தம் மற்றும் குடியிருப்புகளின் அருகே   சதுர வடிவில் அமைந்துள்ளது பேராங்குளம். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இந்தக்குளம் அப்பகுதி மக்கள் குளித்து, துணி துவைக்க பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் பல்வேறு ஆக்கிரமிப்புகளால் இந்தக்குளத்துக்கு நீர்வரத்து நின்று போனதால் கழிவு நீர் குட்டையாக மாறிப்போனது.

இந்நிலையில்புதுக்கோட்டை நகரில் இதைப் போன்ற நிலையில் இருந்த  பல்வேறு குளங்களை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் தீர்மானித்தது. அதன்படி, சில ஆண்டுளுக்கு முன்னர்  ரூ 50 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது. இதே போல மீன் மார்க்கெட், மின்வாரிய அலுவலகம் பின்புறம் உள்ள குளங்களும் பல லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டன.

பேராங்குளத்தைச் சுற்றிலும் சில்வர் பைப்களால் கைப்பிடிச்சுவர்கள் உருவாக்கப்பட்டு, குளத்தைச் சுற்றிலும் பேவர்பிளாக் நடை பாதை போடப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் நடக்கும் இடங்களில் கூட இப்படி கிடையாது.

சமீபத்தில் குளத்திற்கு தண்ணீர் வரவில்லையென்ற புகாரையடுத்து  நகராட்சி ஆணையர் (பொறுப்பு) .ஜீவா சுப்பிரமணியன் முயற்சியால்  நீர்வரத்தாகும் பாதை சீரமைக்கப்பட்டு மழைநீர் உள்ளே  நிரம்பிட வழி பிறந்தது.


ஆனால் குளத்தின் தற்போதைய நிலையும் நடைபாதையும் எப்படி இருக்கிறது என்பதை  இதற்காக செலவழித்த நகராட்சி நிர்வாகம் நேரில்  பார்த்தால் தெரியும். குளத்தை நேரில் பார்த்த சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். நமக்கு  அது குளம். ஆனால் சுற்றியிருப்பவர்களுக்கு அது குப்பைத் தொட்டியாகத்தான்  பயன்படுகிறது என்று எண்ணத் தோன்றுகிறது.

அத்துடன் குளத்தருகில் இருக்கும் பழைய பொருள் விற்பனைக்காரருக்கு கழிவுகளைப்போடும் இடம். இதில் கொட்டப்படும் கழிவுகளால் குளத்தில் உள்ள தண்ணீர் மாசுபட்டு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க வாய்ப்பு அதிகம்தொற்றுநோய்களும் உருவாகலாம்.

இத்தனை செலவு செய்து சீரமைக்கப்பட்ட இந்தக்குளத்தை தூய்மையாகப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு குளத்தைச் சுற்றியிருப்பவர்களுக்கு உண்டு என்பதை நகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் உறுதிசெய்ய வேண்டும். இந்தக்குளத்தின்  சுகாதாரம் கேள்விக்குறியாவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

Top