logo
யோகாவும் தியானமும்: சிலபுரிதல்கள்- முனைவர் ந.முருகேசபாண்டியன்

யோகாவும் தியானமும்: சிலபுரிதல்கள்- முனைவர் ந.முருகேசபாண்டியன்

24/Sep/2020 12:16:25

நவீன வாழ்க்கையில் பரபரப்பாக இயங்க வேண்டிய நெருக்கடியான சூழலில் பலரும் சிக்கியுள்ளனர்.  தகவல் தொழில்நுட்பத்தின் பிரமாண்டமான வளர்ச்சி காரணமாக சாமானியர்களும் அறிவியல் கருவிகளுடன் புழங்க வேண்டியுள்ளது.

முன்னர் நிலத்தில் தானியத்தை விதைத்துவிட்டு, ஐந்தாறு மாதங்கள் எவ்விதமான அவசரமும்இன்றி வாழ்ந்த கிராமத்து விவசாயிகளின் இயற்கை சார்ந்த எளிமையான மனநிலை, இன்று அந்நியமாகிவிட்டது. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது முதலாகத் தொடங்கிடும் ஓட்டம், பதற்றம் ஒருபோதும் முடிவடைதில்லை. எதாவது பொருளை வாங்கு, பயன்படுத்து, ரசனையை மாற்று, தூக்கியெறி, புதியபொருளை வாங்கு என்ற நுகர்பொருள்ப் பண்பாட்டுத் தாரகமந்திரம்,எல்லாவற்றையும் சந்தைக்கானதாக்கிவிட்டது.

 கணவன், மனைவி, குழந்தைகள் என்ற அணுக்குடும்பம்காரணமாகச் சிதலமான குடும்ப உறவுகள், அந்நியமாதலை ஏற்படுத்தியுள்ளன. இத்தகுசூழலில் பல்வேறு பிரச்சினைகளினால் அல்லல் படும்மனிதர்கள், மனஉளைச்சலுக்குள்ளாவது நிகழ்கிறது.பொதுவாக உடலிலும் மனதிலும் ஏற்படும் நோய்கள் பெரிதும் மனதையே பாதிக்கின்றன. இன்றைய பொருளியல்வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடி, அரசியல், குடும்பம், தேவைகள் நோக்கிய ஓட்டம்காரணமாகப் பலரும் மனஅமைதியை இழந்துள்ளனர். பொதுவாக எதிலும் பிடிப்பற்று ஒதுங்கி இருக்கும் மனிதர்கள் பெருகியுள்ளனர்.  சோகமான மனநிலை, கவலை, மனஇறுக்கம், மனஅழுத்தம் பலரையும் பற்றிப்படர்கின்றன.

 அன்றாட வாழ்வில் உற்சாகத்தையும் கொண்டாட்டத்தையும் தொலைத்தவர்கள் மனஅளவில் சுருங்குகின்றனர். மனச்சோர்வு எனப்படும் நோயினால் பாதிக்கப்படாதவர்கள் பூமியில் மிகக்குறைவு.  ஜலதோஷம், காய்ச்சல் போல யாருக்கு வேண்டுமானாலும் மனச்சோர்வுநோய் எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்படவாய்ப்புண்டு. மனதில்நோய் என்றவுடன் பொதுப்புத்தியில் நிலவுகிற மெண்டல், பைத்தியம்,கிறுக்கு, லூஸூ போன்ற சொற்களால் அவதிப்படவேண்டியது இல்லை. உடல் நோய்க்குள்ளாவது போல மனமும் நோய்க்குள்ளாவது இயற்கைதான். நுரையீரலின் வேலை சுவாசம்போல மூளையின் வேலை மனம் என்பது உளவியலாளர்களின் கருத்து. உடலிலுள்ள உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினைகளைக் கண்டறியும் மனம், அதற்குச் சிறிய பிரச்சினை என்றால் கூடக்குழம்பிப் போகிறது.

 மனதைப் பற்றிக் காலங்காலமாகத் தத்துவஞானிகளும்,மதவாதிகளும் நிரம்பச் சொல்லியுள்ளனர்.  புத்தர் சொன்ன கதையில் வரும் பார்வையற்றோர் யானையைத் தடவி ஒவ்வொருவரும் சொன்ன அபிப்ராயங்கள் போல மனதைப் பற்றிய பேச்சுகளும் முடிவற்று நீள்கின்றன.  இன்று வரையிலும் அறிவியலாலும் விளக்க முடியாத மனதின் சூட்சுமங்களைப் பற்றி ஆன்மீகம்,யோகா, தியானம் மூலம் பரப்பப்படும் பரப்புரைகள் எந்தளவில் சரியானவை? யோசிக்க வேண்டியுள்ளது. 

பெரிய பள்ளிக்கூடம் / கல்லூரியில் லட்சம் லட்சமாகப் பணம் செலவழித்துப் படிக்க வைத்தாலும் மகன் அல்லது மகள் படிக்காமல் சோர்ந்து இருக்கின்றனரே எனத் தொடங்கும் பிரச்சினை, காலமெல்லாம் தொடர்கிறது.  கண்டிப்பானபள்ளி, மாணவனும் மாணவியும் பேசினாலே தண்டனை கொடுக்கிற ஒழுக்கம்போதிக்கும் கல்லூரி எனப் பிள்ளைகளைச் சேர்த்து விடத்துடிக்கும் பெற்றோர், தங்களுடைய குழந்தைகளின் மனதைப் புரிந்து கொள்வது இல்லை. 

எப்பொழுதும் படி,படி என விரட்டுவதனால் மாணவர்களின் மனம் சோர்வடைகிறது.சிலர் மனஅழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்து கொள்கின்றனர்.  ஒவ்வொரு குழந்தையும் இயல்பிலே தனித்துவமானது என்பதை நவீனக்கல்வி முறை மறுக்கிறது.

பதின்பருவத்தில் தொடங்கும் பிரச்சினையினால் பாதிக்கப்படும் மனமானது வேலை, திருமணம், குடும்பம், அரசியல், நோய், மரணபயம் எனக்கடைசி வரை பதற்றமடைகிறது.இத்தகைய சூழலில் மனநோய் தொடர்கிறது. ஒவ்வொருவரின் புரிதல் திறனும் ஓரளவு சூழல்சார்ந்தது எனினும் மரபணு முக்கியப் பங்கு வகிக்கிறது.குழந்தையின் விருப்பு வெறுப்பினைத் தீர்மானிப்பதில் மரபணுக்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

மனிதன் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை யோகா, தியானம் மூலம் தீர்க்க முடியும் எனப்பிரசாரம் செய்யும் கார்பரேட் சாமியார்கள் இன்றுபெருகிக் கொண்டிருக்கின்றனர். காட்சி ஊடகங்கள் மூலம் ஊதிப்பெருக்கப்படுகிற சாமியார்களின் படிமங்கள், திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன .இன்னும் சில யோகா மாஸ்டர்கள் மருந்துகளினால் தீராத உடல் நோய்களைக் கூட யோகா, மெடிட்டேஷன் மூலம் குணப்படுத்தமுடியும் என வாரக் கணக்கில் முகாம்கள் நடத்துகின்றனர். இந்தியமரபில் யோகாதத்துவம் இரண்டாயிரமாண்டுகள் பாரம்பரியமுடையது. குறிப்பாகச் சித்தர்களும் சாமியார்களும் பூமியில் தங்கள் இருப்பினை மறக்க யோகா மூலம் முயன்றனர்.

 இன்றுகூட,ஹரித்துவார் கங்கைக்கரையில் வாழும் சாமியார்கள் கஞ்சா போன்ற லாகிரிப்பொருள்கள் மூலம் சூழலைமறந்து ஏகாந்த நிலையில் உறைந்திருக்கின்றனர்;யோகப்பயிற்சியினால் உடலை மரணத்திலிருந்துகாக்க முடியும் என்றுகடுமையாக முயலுகின்றனர். மூச்சுப்பயிற்சி, குண்டலினி எனமுயன்றவர்களின் ஆயுளை விடக் கிராமப் புறங்களில் விவசாய வேலைகளில் ஈடுபட்டவர்கள் நூறாண்டுகள் வாழ்ந்தனர் என்பதுதான் உண்மை. உடலைக் கேவலமாகக் கருதிய மதங்கள், உடலைத்துறந்து சொர்க்கம் போகலாம் எனப்போதித்தன. மருந்து,யோகா, தியானம் மூலம் உடலை வளப்படுத்தலாம் என்று சித்தர்கள் மாற்றுக்கருத்தினை முன்வைத்தனர்.அன்றைய சூழலில், சித்தர்கள் கலகக்காரர்கள்.

தியானம் மனதையும் உடலையும் நலப்படுத்தும் என்ற பிரசாரம் ஓரளவுதான்உண்மை.யோகாஎன்பது ஒருவகையில் உடல்பயிற்சிதான். ஆரோக்கியமாக இருக்கும் உடல்,யோகாவினால் இன்னும் மேம்பாடுஅடையும் என்பதில் ஐயமில்லை.நோய்வயப்பட்ட உடலுக்கும்,மனதுக்கும் மருத்துவ சிகிச்சை கட்டாயம் தேவை.மருந்து, அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையிலுள்ள நோயாளிகள் நிச்சயம் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவேண்டும். ஆனால், யோகாவும் தியானமும் பயிற்சிகள் என்பதை மறைத்து யோகாகுருஜீகள் எனப்படும் கார்ப்பரேட் சாமியார்கள், எல்லாவிதமான நோய்களும் யோகாவினால் குணமாகும் எனப் பிரசாரம் செய்கின்றனர். மேலைநாட்டினர்,இத்தகைய குரு ஜீகளைத்தேடி வந்து ஆலோசனை பெற்றால்,அதைப்பார்க்கும் தமிழர்கள் `ஆகா...குருஜீமாபெரும் ஆற்றல்மிக்கவர் என்று வியப்படைகின்றனர். யோகா, தியானம் போன்றவை எல்லா நோய்களையும் குணமாக்கும் சர்வரோக நிவாரணி என்று கார்ப்பரேட் சொல்வதை அப்படியே நம்புகிறவர்கள் எண்ணிக்கை,இன்று பெருகியுள்ளது.

தனிமனிதனுக்கு மனநலக்கோளாறுகள் சூழல்சார்ந்தும், மரபணுக்கள் சார்ந்தும் ஏற்படுகின்றன. மனதைநலமாக்கிட உளவியல் ரீதியில் அணுகும் மனநல மருத்துவம் அறிவியல் அடிப்படையானது. மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்பது தியானம் மூலம் முடியும் என்பது நம்பிக்கை சார்ந்தது. மனதை அடக்கியாள முடியும் என ஆன்மீக வாதிகளும், மதவாதிகளும் காலங்காலமாகப் போதித்து வருகின்றனர். ஆனால்,மனம் வேலை செய்வது அவரவர் கையில்இல்லை. தியானம் மூலம் மனதைக் கட்டுப்படுத்தலாம் என்பதற்கும் மனநோயைக் குணப்படுத்தலாம் என்பதற்கும்தொடர்பு எதுவுமில்லை. மஞ்சள்காமாலை, காசம், நீரிழிவுபோன்ற நோய்களை நலமாக்கிடதரமானசி கிச்சையும்மருந்துகளும் அடிப்படையானவை. ஆனால், இன்றுபுற்றுநோய் உள்படதீராத நோய்களையும் யோகாவினால் நலமாக்கிடமுடியும்எனப் போலியான யோகா மாஸ்டர்கள் ஊரெங்கிலும்  கிளம்பியுள்ளனர். அவர்களை நம்பிப் பலர் பொருளையும்,உயிரையும் இழந்துள்ளனர்.எல்லாவற்றுக்கும் வரையறை இருப்பதுபோல யோகாவிற்கும் உண்டு. ஆனால்,யோகாவும்,தியானமும் சர்வநோய்க்கானமருந்துபோலகாட்சிஊடகங்கள்மூலம்விளம்பரப்படுத்தப்படுவதுஅறிவியலுக்குமுரணானது. 

நோய் என்பது கர்மத்தினால்வருவது; பாவத்தினால் ஏற்படுவது; இறைவன் அளித்த தண்டனை எனமதங்கள் போதித்த வேளையில், உடலுக்கு முக்கியத்துவம் தந்து யோகாவைச் சித்தர்கள் கற்பித்ததனர். நோய்க்கு மருந்துகளைக் கண்டறிந்திட முயன்ற சித்தர்களின் நோக்கமும், முயற்சியும் தனித்துவமானவை. நோயாளிகளிடமிருந்து பணம் வாங்காமல் மக்களுக்கு யோகாவும் மருந்தும் அளித்த பண்டையச் சித்தர்கள், மக்கள் நலனில்அக்கறை கொண்டிருந்தனர். இன்று கோடிக்கணக்கில் புரண்டு, சொகுசானஆசிரமத்தில் வாழும் கார்ப்பரேட் சாமியார்கள் நோயைத் தீர்க்க யோகாவையும், தியானத்தையும் முன்னிறுத்துவது, ஒரு வகையில் ஏமாற்று வேலை. மனித இனத்தை உய்விக்க வந்த மகான்களாகத் தங்களை முன்னிறுத்தும் கார்பரேட் சாமியார்களின் பேச்சுச் சாதூரியத்தினால், யோகாவும் தியானமும் இன்று பிராண்ட் அடிப்படையில் மார்கெட்டிங் செய்யப்படும் சரக்காக உருமாறியுள்ளன.அதிலும் தியானம் என்ற சொல், பலரையும் விட்டில் பூச்சிகளாக உருமாற்றியுள்ளது.



Top