logo
சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்டம்:ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்வடம் பிடித்தனர்

சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்டம்:ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்வடம் பிடித்தனர்

28/Jan/2021 06:05:09

ஈரோடு, ஜன: சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்  வியாழக்கிழமை காலை 6:30 மணிக்கு  தொடங்கியது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர்.

சென்னிமலை முருகன் கோவிலில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாக முதலில் தேரோட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேரோட்டத்தை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. 

இதனையடுத்து புதன்கிழமை இரவு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.  வியாழக்கிழமை  காலை 6 மணியளவில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தெற்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தினார்கள். 

 மாலை 5 மணிக்கு மீண்டும் தேர் இழுக்கப்பட்டு வடக்கு ராஜவீதி சந்திப்பில் நிறுத்தப்படுகிறது. நாளை 29-ம் தேதி மாலை 5 மணிக்கு தேர் நிலையில்  சேர்க்கப்படுகிறது. 

 பிப்ரவரி 1-ஆம் தேதி (திங்கள்) இரவு 7 மணி அளவில் மகா தரிசனம் நடைபெறுகிறது. அப்போது நடராஜ பெருமானும், சுப்பிரமணிய சாமியும் வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.  தொடர்ந்து நான்கு ராஜ வீதிகள் வழியாக சாமிகள் வலம் வந்து இரவு 11 மணிக்கு  கைலாசநாதர் கோவிலுக்குள் அழைத்து செல்லப்படுகிறார்கள்.

மறுநாள் 2-ஆம் தேதி (செவ்வாய்) மஞ்சள் நீர் உற்சவமும் நடைபெறுகிறது. தேரோட்ட தினத்தன்று தேவஸ்தான திருமண மண்டபத்தில் நடைபெறும் அன்னதானம் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர் திருவிழா ஏற்பாடுகளை ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி, சென்னிமலை கோயில் செயல் அலுவலர் அருள்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Top