logo
பள்ளி, கல்லூரி  மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை: ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தகவல்

பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை: ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தகவல்

09/Feb/2021 06:09:42

 புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் 9 மற்றும் 11 -ஆம்     வகுப்புகள் (பிப்.8) தொடங்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக  மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

 புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆய்வு மேற்கொண்ட பின்னர் அவர் மேலும் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியம் என்ற நிலை உருவாகியுள்ளதற்கு தமிழக அரசு மற்றும்  சுகாதாரத்துறையின் சீரிய வழிகாட்டுதல்களே முக்கிய காரணம். சுகாதாரமான இந்நிலை தொடர்ந்து நீடிக்க பொதுமக்கள் அனைவரும் உரிய ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

 அரசின் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 19.1.2021 முதல் 10 மற்றும் 12 -ஆம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.  அதன் தொடர்ச்சியாக  தற்போது  9 மற்றும் 11 ஆம் வகுப்புகள் திறக்கப்பட்டுள்ளன.அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில்  புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை   நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. 

 புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 9 -ஆம் வகுப்பில் 23,689 மாணவ, மாணவிகளும், 11 -ஆம் வகுப்பில் 19,443 மாணவ, மாணவிகளும் பயின்று வருகின்றனர்.  இவா;களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஜிங் மாத்திரைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஏற்கெனவே பயின்று வரும் 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஜிங் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளில் அதிக இருக்கைகள் அமைத்து சமூகஇடைவெளியுடன் மாணவர்கள் அமரவைக்கப்படுவதுடன், மேலும் கட்டாயம் முகக்கவசம் அணியவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணிந்து வராத மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டு, அனைத்து மாணவர்களும் முகக்கவசம் அணிவது உறுதி செய்யப்படுகிறது. இதேபோன்று கைகழுவும் வசதி, கைகழுவும் கிருமிநாசினி  போன்ற வசதிகளுடன் கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதுடன், ஆசிரியர்களும் உரிய பாதுகாப்பு விதிமுறைகளின் படி மாணவர்களுக்கு பாடங்களை எடுத்து வருகின்றனர்.

 மேலும், பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள், கழிப்பறைகள்    உள்ளிட்ட பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பள்ளிக்கு வருகை தரும் அனைத்து மாணவர்களுக்கும் வெப்பமானி கருவியின் மூலம் வெப்பநிலை கண்டறிந்த பின்னரே பள்ளிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 

இந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி.

இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, வட்டாட்சியர் முருகப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

Top