logo
புதுகை அருகே மொய் விருந்தில் கிடைத்த ரூ.32 லட்சத்தை கோயில் திருப்பணிக்கு வழங்கிய குடும்பம்.

புதுகை அருகே மொய் விருந்தில் கிடைத்த ரூ.32 லட்சத்தை கோயில் திருப்பணிக்கு வழங்கிய குடும்பம்.

09/Feb/2021 06:39:06

புதுக்கோட்டை: புதக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மொய் விருந்து மூலம் கிடைத்த ரூ.32 லட்சம் ரொக்கத்தை அப்பகுதியில் சிவன் கோயில் கட்டும் பணிக்கு நன்கொடையாக ஒரு குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.

 புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் கிராமத்தை சேர்ந்தவர் பாலவேலாயுதம். தீவிர சிவபக்தரான இவர்,  கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக அபுதாபி நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை சொந்த ஊரான நெடுவாசலுக்கு வந்து தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்துவிட்டு மீண்டும் அபுதாபி நாட்டிற்கு சென்று பாலவேலாயுதம் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், தற்போது புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் மொய் விருந்து விழாக்கள் நடைபெற்று வரும் நிலையில்நெடுவாசலில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற மொய் விருந்தில் அபுதாபியில் வேலை பார்த்து வரும் பாலவேலாயுதமும் மொய் விருந்து வைத்துள்ளார். அதில் அவருக்கு ரூ. 32 லட்சம்  மொய் பணம் வசூலாகி உள்ளது. பாலவேலாயுதத்திற்கு வசூலான தொகை குறித்து அவரது குடும்பத்தினர் அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்ட, பாலவேலாயுதம் உடனடியாக அந்த மொய்த்தொகை ரூ. 32 லட்சம் முழுவதையும், நெடுவாசலில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பழமை வாய்ந்த சிவன் கோயில் கட்டும் திருப்பணிக்காக கொடுக்குமாறு தனது மகன் ரெங்கேஸ்வரன், குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, அவரது குடும்பத்தினரும் வசூலான தொகைரூ. 32 லட்சம் முழுவதையும் கோயில் திருப்பணி குழுவினரிடம் ஒப்படைத்தனர். இதனைப் பெற்றுக் கொண்ட கோயில் திருப்பணி குழுவினர், கிராம பொதுமக்கள் பாலவேலாயுதத்தின் குடும்பத்திற்கு நன்றி, பாராட்டுக்களை தெரிவித்தனர். வாங்கிய கடனை கட்டுவதற்காகவும், புதிய தொழில் செய்வதற்காகவும் மொய் விருந்து விழாக்களை பலர் நடத்திவரும் நிலையில், தான் மொய்யாக பெற்ற ரூ.32 லட்சம் ரொக்கத்தையும் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கிய பால வேலாயுதத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Top