logo
தமிழகத்திலும் தாமரை நிச்சயம் மலரும் - துக்ளக் விழாவில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு

தமிழகத்திலும் தாமரை நிச்சயம் மலரும் - துக்ளக் விழாவில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு

17/Jan/2021 08:48:45

சென்னை: தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு பெருகி வருவதாகவும், தாமரை நிச்சயம் மலரும் என்றும் துக்ளக் விழாவில் பாஜக. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.

துக்ளக் இதழின் 51-ஆவது ஆண்டு விழாவில், பாஜக. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழர்கள் பாரம்பரியப்படி பட்டு வேட்டி- சட்டை அணிந்து சிறப்பு விருந்தினராக பங்கேற்று மேலும் பேசியதாவது:

உயர்ந்த கலாசாரம், ஞானிகள் நிறைந்த புனித பூமி. பழமையான மொழிக்கும் இதுதான் புனித இடம். சோ என்றால் துக்ளக். துக்ளக் என்றால் சோ. இப்படித்தான் அடையாளப்படுத்த முடியும். சோ.ராமசாமிக்கு பிறகு, துக்ளக் ஆசிரியராக பொறுப்பு ஏற்ற ஆடிட்டர் குருமூர்த்தி வெற்றிகரமாக அதனை வழிநடத்திச் செல்கிறார். சோ.ராமசாமியிடம் இருந்த எழுத்து திறமை, அர்ப்பணிப்பு உணர்வு மேலும் அதே கூர்மையுடன் துக்ளக் இதழுக்கே உண்டான பாணி குருமூர்த்தியிடம் பிரதிபலிப்பதை பார்க்கமுடிகிறது.

தமிழகத்தில் கூட்டாட்சி சிறப்பாக நடைபெறுகிறது. பிரதமரின் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. இது பயனாளிகளுக்கு நல்ல பலனை கொடுக்கிறது. தமிழகத்துக்கு பல்வேறு துறைகளில் மோடி அளித்து வரும் ஆதரவு, நல்ல முடிவினை காட்டுகிறது. பெண்கள், திருநங்கைகள், ஏழைகள் ஆகியோருக்கு அதிகாரம் அளித்தல் உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு மோடி செயல்படுகிறார். சமூகத்தின் அடித்தட்டில் நிற்பவர்களுக்கு அதிகாரம் அளித்து, சராசரி மனிதன் என்ற நிலைக்கு கொண்டு வருவதற்காக துணிச்சலான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

பிரதமர் தொடங்கிய ஜன்தன் திட்டம் மூலம் தற்போது 40 கோடி பேர் வங்கி கணக்கு வைத்திருக்கிறார்கள். இதன்மூலம் ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் வாழ்வாதாரத்துக்காக 20 கோடி பெண்களுடைய வங்கி கணக்கில் 3 தவணையாக தலா ரூ.500 வீதம்ரூ.1,500 வரவு வைக்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே மிகப்பெரிய இன்சூரன்சு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 10 கோடியே 74 லட்சம் குடும்பத்தினர், அதாவது 50 கோடி மக்கள், நமது நாட்டின் 40 சதவீத மக்கள் பயன்பெற்றனர். இந்த சாதனையை யாரும் இதுவரை அடையவில்லை.

உஜ்வாலா திட்டத்தில் 8 கோடி பேர் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 36 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். தூய்மை இந்தியா திட்டம் மூலம் நமது நாடு 100 சதவீத திறந்தவெளி கழிப்பிடம் இல்லாததாக மாறியிருக்கிறது. புதிய கல்விக்கொள்கை அறிவின் சக்திக்கு தீர்வு கொடுக்கும் வகையில் இருக்கும். மாணவர்களுக்கு சுதந்திரத்தை கொடுத்து, படைப்பாற்றலை உருவாக்கும் வல்லமை படைத்தது.

கொரோனா பேரிடர் காலத்தில் ஊரடங்கை அறிவித்து, சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்து கோடிக்கணக்கான மக்களை மோடி காப்பாற்றிவிட்டார். 16--ஆம் தேதி  தடுப்பூசி போடும் திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார். விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்களை துணிச்சலோடு மோடி கொண்டு வந்திருக்கிறார். அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

நாட்டுக்காக உழைப்பது, மக்களுக்காக உழைப்பது, விவசாயிகளுக்காக உழைப்பது தான் மோடியின் நோக்கம். லே லடாக், தெலுங்கானா, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பீகார், மணிப்பூர், அருணாசலப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த பல்வேறு தேர்தல்களில் பாஜக வெற்றி வாகை சூடியிருக்கிறது.

மக்களுக்கான திட்டங்களை கொண்டு வந்ததால், அவர்களுடைய ஆதரவில் பல்வேறு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தமிழகத்தின் முதன்மையான கட்சியாக பாஜக வளருவதற்கு எங்களுடைய நிர்வாகிகள் பணியாற்றி வருகிறார்கள். தமிழகத்திலும் தாமரை மலரவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். மோடிக்கு ஏராளமான ஆதரவு இருக்கிறது. நாங்கள் அதனை தமிழகத்திலும் உருமாற்றுவதற்கு விரும்புகிறோம். அனைவருடைய ஆதரவுடன் தமிழகத்திலும் தாமரை நிச்சயம் மலரும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்  அவர்.

Top