logo
 எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக   ஏற்க முடியாது என்று நாங்கள் கூறவில்லை- புதுக்கோட்டையில்  நடிகை குஷ்பு பேட்டி

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று நாங்கள் கூறவில்லை- புதுக்கோட்டையில் நடிகை குஷ்பு பேட்டி

10/Jan/2021 08:45:17

புதுக்கோட்டை-ஜன: எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று  நாங்கள்  கூறவில்லை என்றார் பாஜக நிர்வாகி நடிகை குஷ்பு

புதுக்கோட்டை மாவட்ட பாஜக சார்பில் திலகர் திடலில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது  இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக நிர்வாகி குஷ்பு கலந்து கொண்டார்.‌ விழாவில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாடினார்.

 இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு  குஷ்பு அளித்த பேட்டி:  அதிமுக பொதுக்குழுவில் தேசிய கட்சிகள் குறித்து கே.பி. முனுசாமி  பேசியதற்கு மாநில தலைவர் எல். முருகன் உரிய பதில் அளிப்பார். தமிழகத்திற்கு ஜேபி நட்டா வரும்போதுதான்  கூட்டணி உறுதி செய்யப்படுமா என்பது குறித்து எனக்கு தெரியாது. அதை மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும்.

  எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராகஏற்க முடியாது என்று   நாங்கள்  கூறவில்லை.  தேசிய ஜனநாயக கூட்டணிக்கு என்று ஒரு விதிமுறை உள்ளது அந்த  விதிமுறைப்படி முடிவு அறிவிக்கப்படும். ஊழல் குற்றச்சாட்டு குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயார் என்று முதல்வர் அறிவித்த பிறகும் ஸ்டாலின் ஏன்  நிபந்தனை  விதிக்க வேண்டும்.

நிபந்தனை இல்லாமல் ஸ்டாலின் நேருக்கு நேர் விவாதத்திற்கு வர வேண்டியதுதானே.  திமுகவில் இருந்து நான் அரசியல் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. எனக்கு அரசியல் கற்றுக்கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. அப்போது  உள்ள திமுகவிற்கும் தற்போது உள்ள திமுகவிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது..இப்போதுள்ள திமுகவிற்கு நான் கண்டிப்பாக பதிலடி கொடுப்பேன்.

தமிழக அரசியலில் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு அதிரடி மாற்றங்கள் வரும்   தமிழக பாஜக சார்பில் எந்த விதமான பட்டியலும் வெளியாகவில்லை. வெளியான  பட்டியல்  பொய்யானது. இதற்கு பாஜக சார்பில்  ஏற்கெனவே மறுப்பு தெரிவிக்கப்பட்டுவிட்டது.

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ரஜினிகாந்த் பாஜக நிர்பந்தத்தால் தான் அரசியல் கட்சி தொடங்குவதாக வருகின்ற தகவலுக்கு  ரஜினி தான் பதில் கூற வேண்டும்.  மற்றவர்கள் இதில் கருத்து கூறக் கூடாது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இப்போது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என்றார் குஷ்பு. 


Top