logo

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்

22/Sep/2020 11:47:46

 ஊரடங்கு தளர்வு அறிவித்து 20 நாட்கள் முடிந்துள்ள நிலையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால்  மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  தமிழகத்தில் தினசரி 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. அதேபோல மரணங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தற்போது தினசரி 60 முதல் 80 பேர் உயிரிழக்கின்றனர்.  இந்நிலையில், ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 20 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

 இதில், கரூர், கிருஷ்ணிகிரி,  நாகை, நாமக்கல், நீலகிரி, சேலம், தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவாரூர், திருப்பூர், கோவை, தருமபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துவருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் தொற்று தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கோவையில் 15,490 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 3,713 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், செப். 20-ஆம் தேதி நிலவரப்படி கோவையில் 25 ஆயிரத்து 914  ஆக அதிகரித்துள்ளது.. இந்நிலையில் 4,364 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

 இதைத்தவிர்த்து சென்னை, அரியலூர், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தேனி, திருவண்ணாமலை,  நெல்லை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று  குறைந்து வருகிறது. 8 மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை மாற்றம் இல்லாமல் தினசரி ஒரே எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது. செங்கல்பட்டு, ஈரோடு, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவள்ளூர்,  தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று சமநிலையில் உள்ளது.

Top