logo
மறந்துபோன பொங்கல் வாழ்த்து அட்டை...!

மறந்துபோன பொங்கல் வாழ்த்து அட்டை...!

09/Jan/2021 06:32:28

புதுக்கோட்டை-ஜன:  தமிழர்களின் முக்கியமான பண்டிகை பொங்கல் விழா. இது மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என தொடர்ந்து வரிசை கட்டி நிற்பதால்  தமிழ்நாடே திருவிழா கோலம் பூண்டுவிடும். பொங்கல் பண்டிகையை வரவேற்பதற்காக  ஒவ்வொரு வீடுகளும் சுத்தம் செய்யப்பட்டு, புது வர்ணம் தீட்டப்பட்டு  விசேஷ வீடுகள் போல் காட்சியளிக்கும்.     

உறவினர்கள், நண்பர்களுக்கு அஞ்சலில் பொங்கல் வாழ்த்து அட்டை   அனுப்பிய  தலைமுறை நாம்தான் என்றால், நமக்கே தற்போது  நம்ப முடியாமல் போனது.  வாழ்த்து அட்டை (Greeting card)யை  வாங்கி கண்டிப்பாக நீங்களும் எழுதி அனுப்பியிருப்பீர்கள் உங்களுக்கும்  வாழ்த்து அட்டை கிடைத்திருக்கும். பொங்கலுக்கும், புத்தாண்டுக்கும், வாழ்த்து அட்டை அனுப்பும் வழக்கம் 1990 கள் வரை  வழக்கத்தில் இருந்தது.  இந்த காலகட்டம வரை வாழ்த்து அட்டைகள் மட்டும்தான், வாழ்த்தை பரிமாறிக்கொள்ளும் சாதனமாக இருந்தது என்றால் மிகையில்லை.

வாழ்த்து அட்டையும் ஒரு வகையில், கல்யாண  பத்திரிகையை தேர்வு செய்வது மாதிரிதான். நமது ரசனை அதில் இருக்க வேண்டும், நமது பொருளாதார ஸ்டேடஸ் அதில் இருக்க வேண்டும். கொஞ்சம் பணக்கார சொந்தக்காரங்களுக்கு காஸ்ட்லியா கார்டு வாங்குவதும், மற்றவர்களுக்கு முடிந்த விலையில் கார்டு வாங்குவதும் பலரது வாடிக்கை. பணக்கார சொந்தங்களுக்கு கம்மி விலையில் அட்டை அனுப்பிவிட்டால் நம்மை  மட்டமாக  நினைத்து விடுவார்களோ என்ற அச்சத்தால் பார்த்து பார்த்து புது டிசைனாக பார்த்து வாங்குவார்கள்.

 கடவுளர்களில் முருகன் படம் போட்ட வாழ்த்து அட்டைகள் மிகவும் பிரபலம். பொதுவாக பெரியவர்கள் என்றால் பொங்கல் பொங்கும் பானை, பக்கத்தில் கரும்பு இப்படியாக படம் இருப்பதைத்தான்  தேர்வு செய்வார்கள். ஒரு வாழ்த்து அட்டையை வைத்தே, அதை அனுப்பியவர்களின் வாழ்க்கை ரசனையை முழுவதும் கண்டுபிடித்துவிடலாம்.

பொங்கல், புத்தாண்டுக்கு பல நாட்கள் முன்பே கடைகளுக்குச்சென்று தங்களுக்கு பிடித்தமான தங்களது வசதிக்கு ஏற்ப  வாழ்த்து அட்டை தேடி எடுப்பதும், அதை 15 பைசா தபால் வில்லை தொடங்கி 25 பைசா, 50 பைசா வரை ஒட்டி  அனுப்பக்கூடிய  காலம்  அன்பை பரிமாறிக்கொண்ட பொற்காலமே. இந்த அட்டைகள் பயணித்து சரியாக பொங்கலுக்கு முதல் நாளில் சென்றடையும். இதில் ஒரிரு நாள்கள் தாமதமானாலும்  மாட்டுப் பொங்கலுக்கோ, காணும் பொங்கலுக்கோதான் போய் சேரும். 

அஞ்சல் வழியாக அனுப்பும்போது ஊர்களின்  தொலைவைப் பொறுத்து  ஏறத்தாழ ஒரு வார கால அவகாசம்  தேவைப்படும் . ஒரு வீட்டுக்கு எத்தனை முறை அஞ்சல்காரர் போகிறாரோ, அந்த அளவுக்கு அந்த குடும்பம் ஊர்காரர்களால்  மதிப்பிடப்படும். எவ்வளவு சொந்தக் காரங்க, நண்பர்கள் கார்டு அனுப்புறாங்க என அக்கம்பக்கத்தினர் வியப்புடன்  பேசுவதை கேட்பது தனி சுகம்.  இந்த சந்தோஷத்தை இப்போதைய தலைமுறை  கேள்விப்படத்தான் முடியுமோ தவிர  அனுபவிக்க முடியாது.

 வாழ்த்து அட்டையில் இன்னொரு வசதியும் இருக்கிறது. அங்கு உங்கள் கையெழுத்து இடம் பிடிக்கும். உங்களுக்கு பிடித்தவர் கையெழுத்து இடம் பிடிக்கும். காலத்தால் அழியாத பட்டயம் அந்த எழுத்துக்கள். கையெழுத்தை பார்த்ததுமே, அனுப்பியவர் முகம் உங்களுக்கு சட்டென்று ஞாபகம் வந்துவிடும். அதுதான் கையெழுத்தின் மகத்துவம், தனித்துவம். என்னதான் வாட்ஸ்அப் அல்லது எஸ்எம்எஸ்சில் மெசேஜ் அனுப்பினாலும், அது தட்டச்சு கண்டுபிடித்தவரின் அச்சு வடிவம்தானே தவிர, உங்கள் மனதின் வரி வடிவம் இல்லையே. மை சிந்திவிட கூடாது என பார்த்து பார்த்து எழுதிய அந்த அக்கறை, இந்த மெசேஜில் இருக்கப்போவது கிடையாதே. உங்களுக்கு பிடித்தவர்கள் அனுப்பும் வாழ்த்து அட்டையை பார்க்கும்போது தனி பீலிங் வர முக்கிய காரணம் உண்டு. 

ஏனெனில், அது உங்களுக்கானது. உங்களுக்கு மட்டுமேயானது. பத்தோடு பதினொன்றாக பார்வேர்ட் செய்யப்படும் மெசேஜ் போன்றது கிடையாது. உங்களுக்காக கடைக்குப் போய் தேர்ந்தெடுத்து, உங்களுக்காக நேரம் ஒதுக்கி, உங்களுக்காகவே கைப்பட எழுதிய அன்பின், பெரும் ஊற்று அது. அந்த அட்டை எத்தனை வருடம் கடந்தாலும் உங்கள் பெட்டகத்தில் மாறாமல் அப்படியே இருக்க கூடியது.

 இந்த தனித்துவம், இப்போதைய, எந்த தகவல் தொடர்பு சாதனத்தாலும் கொடுக்க முடியாத தனிச்சிறப்பு. அன்பு, நாஸ்டாலஜி என்ற பல விஷயங்களை தாண்டி, தாய்மொழியாம் தமிழுக்கு செழுமை சேர்க்க வாழ்த்து அட்டை உதவியது. எழுதும்போது நமது மொழியாற்றல் பெருகியது. இப்படியான பாரம்பரியம் உள்ளவர்கள் என்பதாலோ என்னவோ, இப்போதும் சமூக வலைத்தளங்களில் தமிழில் டைப் செய்வதில் மற்ற மாநிலத்துக்காரர்களைவிட, தமிழர்கள்தான் முன்னிலையில் இருக்கிறார்கள். 

நல்லவேளையாக இதையாவது செய்வது தாய்மொழிக்கு நாம் செய்துவரும் கைமாறுதான். ஆனாலும் தவறு செய்துவிடாமல் எழுத வேண்டும், அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும் என்ற ஜாக்கிரதை உணர்வை கொடுத்தது வாழ்த்து அட்டை மட்டும்தான். பழைய பெருமையை பேசுவதற்காகவும், நினைவுகளை அசைபோட்டு மகிழ மட்டுமே என்று இந்த பழக்கத்தை மீட்டெடுக்கப்பட வேண்டும். பழையபடி பேனாவை கையில் எடுங்கள். வாழ்த்து அட்டையை தேர்ந்தெடுங்கள்.

பழைய மாதிரியே உறவுகளுக்கும், நட்புகளுக்கும் அட்டை  அனுப்புங்கள். அவர்களையும் எழுத தூண்டுங்கள். காலச் சக்கரத்தின் மடியில் அமர்ந்து பின்னோக்கி பயணிக்கும் அனுபவத்தை பெறுங்கள்.  நமது பாரம்பரியத்தை காக்கும், எழுச்சிமிகு நிகழ்வாக அமைய வேண்டும்.

சுமார் 30ஆண்டுகளுக்கு முன்னர் பொங்கல் வாழ்த்து அட்டை வண்ணப்படங்களுக்காக புதுக்கோட்டையில்  பலநாட்கள் காத்திருந்து பல்வேறு ஓவியர்களிடம் சுவாமி படங்கள் , இயற்கைகாட்சி தலைவர்கள்போன்ற படங்கள் பொங்கல் வாழ்த்து அட்டை தயாரிப்பவர்கள்  ஆர்டர்  கொடுத்து    வாங்கிச்சென்றுள்ளன என்பது பெருமைமிகு வரலாறு.

புதுக்கோட்டையில் பல்வேறு வாழ்த்து அட்டைகள் திருமண வண்ணக்கலர்அட்டைகள் பல ஆண்டுகளாக விற்பனை செய்து வரும் பிருந்தாவனம் வடக்கு ராஜ  வீதியில் உள்ள பூரணி  அழைப்பிதழ் உரிமையாளர் சங்கர்  கூறியதாவது:

 கிறிஸ்மஸ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்து அட்டைகள்  விற்பனை செய்து வருகின்றோம். பல்வேறு வண்ண மாடல்களில் கடை முழுவதும் விளையாட்டு சுவாமி படங்கள்,வீரர்கள், பொங்கல் கொண்டாட்ட வாழ்த்துகள் என அனைவரது பிரியத்துக்கும் ஏற்ப அட்டைகள் குவிந்து கிடக்கும்.ஒற்றை அட்டையாய், இரட்டை அட்டைகளாக, திறந்தால் வாழ்த்து குரல் எழுப்பும் அட்டைவாழ்த்துஅட்டைகள்  வைத்து இருப்போம்.

தற்போது வாழ்த்துஅட்டைகள் விற்பனை குறைந்து   விட்டது சிற்சில   வாடிக்கையாளர் களின் வேண்டுகோளை ஏற்று தற்போதும் பொங்கல் வாழ்த்து அட்டைகள் விற்பனை செய்கின்றோம் பொங்கல் தினத்தில் பொங்கல் வாழ்த்து அட்டை  வந்தால் நமது மனதில் ஏற்படக்கூடிய குதூகலத்தைக் கூறுவதற்கு வார்த்தைகள் கிடையாத என்றார்.   

Top