logo
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு  சிட்டி யூனியன் வங்கி சார்பில் ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள்:அமைச்சர் ரகுபதி வழங்கல்

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிட்டி யூனியன் வங்கி சார்பில் ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள்:அமைச்சர் ரகுபதி வழங்கல்

12/Jun/2021 10:30:55

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிட்டி யூனியன் வங்கி சார்பில் ரூ.12 லட்சம் மதிப்பிலான 15 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகளை  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி  சனிக்கிழமை (12.6.2021)  வழங்கினார்.

பின்னர் அமைச்சர்  ரகுபதி கூறியதாவதுதமிழக முதல்வர் நேரடியாக சென்று மேட்டூர் அணையில் இருந்து (ஜூன்-12)  தண்ணீரை  திறந்து வைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் சார்பில் முதல்வருக்குநன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். முதல்வர் உத்தரவிற்கிணங்க டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் காவிரி நீர் செல்லும் வாய்க்கால்கள் போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, கறம்பக்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட கடைமடை பகுதிக்கும் காவிரி நீர் வரும் வகையில் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முதல்வர் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கையின் காரணமாக கோவிட் தொற்று பெருமளவில் குறைந்து வருகிறதுதமிழக அரசின்  கோவிட் தடுப்பு பணிகளுக்கு பல்வேறு தனியார் அமைப்புகளும் தாமாக முன் வந்து மருத்துவ உபகரணங்கள் மற்றும் கோவிட் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது.

அதனடிப்படையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிட்டி யூனியன் வங்கியின் சார்பில் ரூ.12 லட்சம் மதிப்பிலான 15 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிரித்து வழங்கப்பட உள்ளது.

பொதுமக்கள் உயிர்காக்கும் பணியில் மூன்றாம் கட்டமாக மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்த கும்பகோணத்தை தலைமையிடமாக செயல்படும் சிட்டி யூனியன் வங்கி அலுவலர்களுக்கும் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான வைட்டமின் மாத்திரைகள் வழங்கிய மணிகண்டனுக்கும்  மாவட்ட மக்களின் சார்பில் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கோவிட் காலத்தில் பொதுமக்களை பாதுகாக்க நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதுடன் தமிழகத்தில் நெல் உற்பத்தியை அதிகரித்து  விவசாயிகளின்  வாழ்வாதாரத்தை உயர்த்தவும் அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. பொதுமக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் நிறைவேற்றும் அரசாகவும் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

மேலும் நீதிமன்றங்களில் அரசின் சார்பில் வாதாட நன்கு திறமையானவர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்படுவார்கள். கோவிட் தொற்று குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். தவறான தகவல்கள் பரப்பும் நபர்கள் குறித்து புகார் வந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி .

இந்நிகழ்வில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, வழக்குரைஞர் கே.கே.செல்லப்பாண்டியன் , மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ராமு, சிட்டி யூனியன் வங்கி முதுநிலை பொது மேலாளர்கள் ரமேஷ், மோகன், மண்டல வளர்ச்சி மேலாளர் மோகனசுந்தரம், மேலாளர்கள் லெட்சுமணன், சுரேஷ்பாபு  உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

Top