logo
எம்.ஆர்.பி செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

எம்.ஆர்.பி செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

11/Jan/2021 08:39:01

ஈரோடு, ஜன: தமிழ்நாடு எம். ஆர். பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு காளைமாடு சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் இந்திர நெல்சன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில செயலாளர் பரமேஸ்வரி, கோவை மாவட்ட தலைவர் சிவப்பிரியா, ஈரோடு மாவட்ட தலைவர் சசிகலா, மாவட்ட செயலாளர்கள் ப்ரீத்தி, தமிழ்செல்வி, விமலா, அன்பரசன் சங்கீதா உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்டத் தலைவர் சசிகலா கூறியதாவது: சுகாதாரத் துறையில் எம்.ஆர்.பி செவிலியர்கள் பங்கு மிகவும் இன்றியமையாதது. இந்த செவிலியர்கள்   அனைவரும் முறையாக பி.எஸ்.சி நர்சிங் படித்து தேர்வில் தேர்ச்சி பெற்று வந்தவர்கள்தான். 

கிராமப்புறங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில்   முதல் உதவி முதல் மகப்பேறு சிகிச்சை வரை 24 மணி நேரமும் தங்கு தடையின்றி சிறப்பாக எங்களது செவிலியர்கள் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக கொரோனா உலகை அச்சுறுத்திக் கொண்டிருந்த நிலையில் உயிரையும் பொருட்படுத்தாமல் எம்ஆர்பி செவிலியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

 அதில் ஒரு சிலர் தொற்று ஏற்பட்டு இறந்தும் உள்ளனர்.  முதலில் எங்களை ஒப்பந்த அடிப்படையில் எடுத்தனர். பணியில் அமர்த்தும் போதே மூன்று வருடத்தில் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று கூறியிருந்தனர். ஆனால் ஆறு வருடம் ஆகியும்  பணி நிரந்தரம் செய்யவில்லை.

எங்களை பணி நிரந்தரம் செய்து நிரந்தர செவிலியர்கள் க்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 180க்கும் மேற்பட்ட எம்.ஆர்.பி செவிலியர்கள் அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.  எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றார். 

 


Top