logo
இந்தியாவில் 6, தமிழகத்தில் 1 நபருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் 6, தமிழகத்தில் 1 நபருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி

30/Dec/2020 12:15:00

சென்னை: பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய கொரோனா, இந்தியாவில் 6 பேருக்கும், தமிழகத்தில் ஒருவருக்கும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து அந்நாட்டுடனான, விமான போக்குவரத்தை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் நிறுத்தியது. உருமாறிய கொரோனா வைரஸ் முதன்முதலில் பிரிட்டனில் தான் பரவியது. அந்த உருமாறிய கொரொனா வைரஸ், பழைய கொரோனா வைரசைவிட மிகவும் வேகமாக பரவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து, பிரிட்டனில் இருந்து வந்தவர்களை கண்காணிக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டது. அதன்படி கடந்த நவம்பர் 25-ந் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரை பிரிட்டனில் இருந்து திரும்பிய 33 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில், பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் 116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அவர்களுக்கு உருமாறிய கொரோனா வைரஸ்தான் பரவியுள்ளதா? என்பதை கண்டறிய அவர்களது ரத்தம் மற்றும் சளி மாதிரிகளை கொண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ஐ.சி.எம்.ஆர்.) ஆய்வுகளை மேற்கொண்டது.

இந்நிலையில், அவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். இன்று அறிவித்தது. புனே, புதுடெல்லி, பெங்களூரு, ஐதராபாத்தில் உள்ள ஆய்வகங்களில் பரிசோதனை நடந்தது. பெங்களூரு ஆய்வு மையத்தில் நடந்த பரிசோதனையில் 3 பேருக்கும், ஐதராபாத் ஆய்வகத்தில் நடந்த பரிசோதனையில் 2 பேருக்கும், புனே ஆய்வகத்தில் நடந்த பரிசோதனை ஒருவருக்கும் உருமாறிய கொரோனா உறுதிபடுத்தப்பட்டது.

இதனையடுத்து, அவர்கள் அனைவரும் தனிமைபடுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். 6 பேருடன் விமானத்தில் வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய, புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுகாதாரத்துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, கடந்த ஒரு மாதத்தில் பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 2,800 பேரில் 1,549 பேரை கண்டறிந்து கொரொனா பரிசோதனை செய்துள்ளோம். அவர்களில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நபருக்கு சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம். அவருடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. ஆனாலும், தனிமைப்படுத்தியுள்ளோம் என்றார்.


Top