logo
குற்ற சம்பவங்களை தடுக்க சி.சி.டி.வி கேமராக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன: ஈரோடு மாவட்ட எஸ்பி. தங்கதுரை

குற்ற சம்பவங்களை தடுக்க சி.சி.டி.வி கேமராக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன: ஈரோடு மாவட்ட எஸ்பி. தங்கதுரை

27/Jan/2021 06:48:23

ஈரோடு, ஜன:  ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் தாய் வீட்டிற்கு வந்த ரேகா என்ற பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட கொலை வழக்கில்  தொடர்புடைய செந்தில் குமார் என்ற பெயிண்டர் கைது செய்யப்பட்டார். கொலை நடந்த வீடு அருகே பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சியில் அவரது உருவம் பதிவாகி இருந்ததை வைத்து போலீசார் அவரை கைது செய்து சிறையிடைத்தனர்.

இது குறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தங்கதுரை கூறியதாவது: குற்றச் சம்பவங்களை தடுக்க  மூன்றாவது கண்  என்று அழைக்கப்படும் சி.சி.டி.வி கேமரா பதிவுகள்  முக்கிய பங்கு வகிக்கின்றன. குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவதற்கு இந்த கேமராவின்  பயன்பாடு முக்கியமானதாக கருதப்படுகிறது. 

ஈரோடு மாநகரில் முக்கிய சாலை மற்றும் சாலை சந்திப்புகளில் காவல்துறை சார்பில்  சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே 320 கேமரா பயன்பாட்டில் உள்ளன .இந்நிலையில் கூடுதலாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 415 கேமரா  பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.  சி.சி.டி.வி கேமராவின்  பயன்பாடு மிக அத்தியாவசியமானது.

பொதுமக்கள் இதன்  முக்கியத்துவத்தை உணர்ந்து தங்கள் வீடுகளில் பொருத்த  முன்வரவேண்டும். மிகக் குறைந்த விலையிலேயே  தரமான சி.சி.டி.வி கேமரா தற்போது  கிடைக்கின்றது. பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு பொது மக்கள் சி.சி.டி.வி கேமராவை  பொருத்த வேண்டும். இது குறித்த விழிப்புணர்வு  அவசியம்.

 ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் கூடுதலாக  பொருத்தப்பட்டு வரும் சிசிடிவி காமெரா விரைவில் பயன்பாட்டிற்கு வரும். பொதுமக்கள் அவசர காலங்களில் போலீசாரை தொடர்பு கொள்ள காவலன் எஸ். ஓ . எஸ் செயலி உள்ளது. இதைப் பெண்கள் தங்களது ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டு அவசர தேவைக்கு அழைக்கலாம். மேலும் 100 எண்ணிலும் டயல் செய்து அழைக்கலாம் என்றார் அவர்.

Top